திங்கட்கிழமை தேசிய டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம்

234 0

நாடு பூராகவும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகின்ற அபாய நிலை காணப்படுவதால், நாளைய மறுதினம் திங்கட்கிழமை தேசிய டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடு பூராகவும் 43 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பிடிக்கப்பட்டுள்ளது.இதில், இம்மாதத்தின் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் சுமார் 8,000 பேர் வரையில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டுமான ஸ்தலங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய பொது இடங்களில் டெங்கு நுளம்பு பெருக்கெடுக்கின்ற அபாயகரமான சூழல்நிலை உள்ள பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாளைய மறுதினத் தை தேசிய டெங்கு ஒழிப்புத் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், தொழில் செய்யும் ஸ்தலங்களில் உள்ளவர்கள் தொழில் செய்யும் இடங்களையும் வீடுகளில் உள்ளவர்கள் தங்களின் வீட்டின் சுற்றுச் சூழலையும் அன்றைய தினமன்று குறைந்தது ஒரு மணித்தியாலய நேரத்தையாவது சுத்தம் செய்வதற்கு ஒதுக்கிகொள்ளும்படி சுகாதார சேவைப் பணிப்பாளர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.