நிமல் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழு நியமனம்

166 0

ஜப்பான் நிறுவனமொன்றிடமிருந்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் பெற்றுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார்.

அதற்கமைய இது தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியால் விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி குசலா சரோஜனி வீரவர்தனவின் தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன் ஏனைய அங்கத்தவர்களாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க , ஓய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான எஸ்.எம்.ஜீ.கே. பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணை அறிக்கையை இம்மாதம் 31 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விசாரணைகள் நிறைவடையும் வரை நிமல் சிறிபால டி சில்வா கடந்த அரசாங்கத்தில் வகித்த துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த அமைச்சு பதவி வெற்றிடமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது .