டலஸ்-சஜித் கூட்டுக்கு இந்தியா ஆதரவா?

104 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கும் கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் டலஸை ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு இடையில் தர்க்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தச் சந்தர்ப்பத்தில், சுமந்திரன் அமெரிக்கா, இந்தியாவின் நிலைப்பாடு கூட டலஸ், சஜித் கூட்டை ஆதரிப்பது தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்சமயத்தில் அதற்கு எந்த உறுதிப்பாடு என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதன்போது, சுமந்திரன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகரை தொலைபேசியில் அழைத்து இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு கோரியதோடு தொலைபேசியை செல்வம் அடைக்கலநாதனிடத்தில் கையளித்துள்ளார்.

இந்த விடயத்தினை கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களின் மூவர் வீரகேசரியிடத்தில் உறுதிப்படுத்தினர்.

இருப்பினும், பிராந்திய பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி மேற்படி விடயத்தினை சுமந்திரன் எம்.பி நிராகரித்துள்ளார். அந்த நிராகரிப்பினை அவர் தனது டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.

இதேவேளை இந்திய உயர்ஸ்தனிகரகத்தின் தகவல் ஊடகத்துறை மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு பிரிவின் தலைமை அதிகாரி எல்டோஸ் மத்தியூவும் நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமது அதிகாரிகள் அவ்விதமான உரையாடலை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் வீரகேசரியிடம் தெரிவித்தார்.