பதில் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கள் மற்றும் அறிக்கைகளை நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது.
ஜனாதிபதி பதவியை ஏற்பதற்காகவே வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருவதாக கொழும்பு மறை மாவட்டத்தின் ஊடகப் பேச்சாளரான அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்தார்
சுதந்திரமான விசாரணைக்கு சர்வதேசத்தின் உதவியை பெறுவதற்கு அப்போதைய பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க காலதாமதம் செய்ததாகவும் அருட் தந்தை சிறில் காமினி அடிகள் குற்றஞ் சாடினார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
2019 உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த ஸ்கொட்லாந்து யார்ட், இன்டர்போல் மற்றும் ஏனைய சர்வதேச சட்ட அமுலாக்க அமைப்புகளின் உதவியை இலங்கை அதிகாரிகள் நாடியிருக்க வேண்டும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பது வேடிக்கையாகவுள்ளது.
பதில் ஜனாதிபதியின் அறிக்கைகளை நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது. இவ்வாறான கருத்துக்கள் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் வகையிலும், நீதி கோரி நிற்பவர்களையும் அவமதிக்கும் செயலாகும்.
பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் பயன்படுத்தி பதில் ஜனாதிபதி நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற இன்னுமொரு அரங்கேற்றமாகும்” என்றார்.

