பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகபெருமவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.சர்வக்கட்சி அரசாங்கத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் ஒன்றினைய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தினார் .
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதி பதவி தொடர்பில் தனது தனிப்பட்ட நிலைப்பாட்டிற்கு முன்னுரிமையளிக்காமல் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினை கருத்திற்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சிறந்த தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்.
டலஸ் அழகபெருமவின் பெயரை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ முன்மொழிந்ததை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் உறுதிப்படுத்தியமை வரவேற்கத்தக்கது.
பேராசிரியர் ஜி.எல் பீரிஸின் தீர்மானம் ரணில் விக்கிரமசி;ங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்த ஆளும் தரப்பினர்களை பலமுறை சிந்திக்க வைத்துள்ளது.
டலஸ் அழகபெரும ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்டால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அரசாங்கம் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஸ்தாபிக்கப்படும்.மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றினைய வேண்டும்.
சகல தரப்பினரும் ஒன்றினைந்து தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.225 பாராளுமன்ற உறுப்பினர்களும் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும்.
பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகபெருமவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம். நாட்டு மக்கள் நம்பிக்கை கொள்ளும் அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது என்றார்.

