கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவிப்பு

371 0

முல்லைத்தீவு கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில் 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணிகளை தம்மிடம் மீள வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 9 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

கேப்பாபுலவு பிலவுக்கடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இதுவரை தீர்க்கமான முடிவுகள் முன்வைக்கப்படாத நிலையில் அக்கிராம மக்கள் இன்று 09ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பெற்றோருடன் போராட்ட பகுதியிலிருக்கும் அவர்களின் பிள்ளைகளும் பாடசாலை செல்ல முடியாத நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கரைதுரைபற்று பிரதேச செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு இன்று விஜயம் செய்தனர்.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோரை மாவட்ட அரச அதிபரும் பிரதேச செயலாளரும் கேட்டுக்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.