ரணில் தெரிவானால் பிரதமராக தினேஷ்

209 0

தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாக  நியமித்து, சபை முதல்வர் தினேஷ் குணவர்தனவை பிரதமராக நியமிக்கும் யோசனை ஒன்றினை ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஜனாதிபதி பதவி இராஜினாமாவை அடுத்து பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இடைக்கால ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் ஆளுந்தரப்பு உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் ஒரு சில சிரேஷ்ட தலைவர்கள் கலந்துகொண்ட இந்த சந்திப்பின் போது, பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த போதிலும் அவர் தம்மை இடை நடுவே கைவிட்டு சென்றுள்ளதாகவும், இப்போது ரணில் மட்டுமே எமக்கான தெரிவாக உள்ளார் எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஒரு சில உறுப்பினர்கள், ரணில் பதில் ஜனாதிபதியானால் அவர் மூலமாக தினேஷ் குணவர்தனவை பிரதமராக்கி கட்சியையும் அரசாங்கத்தையும் பலப்படுத்த முடியும் என்ற யோசனையையும் முன்வைத்துள்ளனர்.