காலி முகத்திடல் அனைத்து கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் பொது மக்களில் பிரபலமான செயற்பாட்டாளர்களாக அறியப்படும் ரெட்டா எனும் ரனிந்து சேனாரத்ன, டிலான் சேனநாயக்க ; அவிஷ்க விராஜ் கோனார ஆகியோருக்கு சொந்தமானது என கூறப்படும் ; இலங்கை வங்கியின் மூன்று வங்கிக்கணக்குகளில் 450 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
கடந்த 15 ஆம் திகதி, வெளிநாட்டிலிருந்து குறித்த மூவரின் மக்கள் வங்கி – யூனியன் பிளேஸ் கிளையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு தலா 150 இலட்சம் ரூபா வீதம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை அவர்கள் வைப்புச் செய்யப்பட்டதிலிருந்து ஒரு மணித்தியாலத்துக்குள் வெள்ளை நிற ப்ரியஸ் ரக மோட்டார் வாகனத்தில் வந்து, வங்கி ஊழியரையும் அச்சுறுத்தி பெற்றுச் சென்றதாக சமூக வலைத் தளங்களில் செய்திகள் வெளியாகின.
இந் நிலையிலேயே அது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
‘ஆம்… குறித்த பண விவகாரம் குறித்து சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவ்வாறு பணம் வைப்பிலிடப்பட்டிருப்பின் அதன் பின்னணி உள்ளிட்ட விடயங்களை வெளிப்டுத்த அவ்விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னால் ஏதும் குற்றங்கள் இருக்கிறதா என ஆராய வேண்டும்.’ என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
;இந்த விசாரணைக்கு முறைப்பாட்டினை யார் அளித்தார் என்பது குறித்து பொலிஸ் பேச்சாளரிடம் வினவிய போது, முறைப்பாடு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டார்.
;எவ்வாறாயினும் தமக்கு அவ்வாறு யூனியன் பிளேஸ் மக்கள் வங்கிக் கிளையூடாக பணம் வந்தமையை போராட்டக் காரர்களான குறித்த மூவரும் மறுக்கும் நிலையில், சமூக வலைத் தள தகவல்களில் குறிப்பிடப்ப்ட்டுள்ளதைப் போன்று குறித்த ; திகதியில் தாங்கள் குறித்த வங்கிக் கிளைக்கே செல்லவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

