பொருளாதார மீட்சிக்கு அவசியமான நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை

249 0

அண்மைக்காலங்களில் பதிவான சம்பவங்கள் உள்ளடங்கலாக இலங்கையின் தற்போதைய நிலைவரம், அந்நாட்டின் உள்ளக விவகாரமே என்று தெரிவித்துள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் மரியா ஸகரோவா, நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை இலங்கையின் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்களின் தன்னெழுச்சிப்போராட்டங்களால் நாட்டில் தற்போது அரசியல் நெருக்கடி மிகத்தீவிரமடைந்திருக்கும் பின்னணியிலேயே ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்

;அதன்படி ‘இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் சம்பவங்கள் அந்நாட்டின் உள்ளக விவகாரமேயாகும். நட்புநாடு என்ற ரீதியில் இலங்கையின் அரசியல்சார் செயன்முறைகள் அதன் அரசியலமைப்பிற்கும் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கும் அமைவாக முன்னெடுத்துச்செல்லப்படவேண்டும் என்று கருதுகின்றோம்’ என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைவரம் வெகுவிரைவில் முன்னரைப்போன்று இயல்புநிலைக்குத் திரும்பும் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ள அவர், நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை இலங்கையின் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் என்று கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

;இலங்கை கடந்த சில வருடங்களில் ரஷ்யாவுடனான தமது தொடர்புகளை நன்கு ஆழப்படுத்தியுள்ளது. எனவே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டிற்கு அவசியமான எரிபொருள் இறக்குமதியைப் பொறுத்தமட்டில் இலங்கையானது ரஷ்யாவிலேயே தங்கியிருக்கின்றது. எனவே உக்ரேன் மீதான ரஷ்யப்படையெடுப்பு தொடர்பில் பல உலகநாடுகள் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்த போதிலும், இவ்விடயத்தில் தாம் எந்தவொரு தரப்பையும் சாரப்போவதில்லை என்று இலங்கை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது