இலங்கை அரசியல் தலைவர்களிடம் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள வேண்டுகோள்

293 0

பொதுநலவாய சாசனத்திற்கு அமைவாக இலங்கையில் ஜனநாயக நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறு பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் இலங்கையின் அரசியல் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் நாட்டின் முக்கிய கட்டமைப்புக்கள் மற்றும் அரசியலமைப்பிற்கு அமைவான நிர்வாகம் ஆகியவற்றைப் பாதுகாத்து ஸ்திரப்படுத்துவதற்கும் உதவுவதற்குத் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை அவர் மீளுறுதிப்படுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அமைதியான முறையிலான மாற்றமொன்று ஏற்படுவதற்கு வழிவகுக்கக்கூடியவகையில் இலங்கையர்கள் அனைவரும் கட்டுப்பாட்டுடன் செயற்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார். பொதுநலவாய அமைப்பென்பது எமக்கிடையில் பகிரப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட அமைப்பாகும். அந்தவகையில் ஆசியாவின் மிகப்பழமைவாய்ந்த ஜனநாயக நாடுகளில் ஒன்றாகவும், நவீன பொதுநலவாய அமைப்பின் ஸ்தாபக உறுப்புநாடாகவும் விளங்கும் இலங்கை எமது அமைப்பின் கொள்கைகள் மீதான தமது உறுதிப்பாட்டைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்திருப்பதுடன், அவை அந்நாட்டு மக்களால் நம்பப்படுகின்றன.

எனவே தற்போது இலங்கையில் ஜனநாயகக்கோட்பாடுகளையும் சட்டத்தின் ஆட்சியையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தலைமைத்துவ நிலையிலுள்ள அனைத்துத்தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்’ என்று பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆட்சி நிர்வாகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இலங்கை மக்களால் வெளிப்படுத்தப்பட்டுவரும் கரிசனைகள் ஆராயப்படுவதும், அவற்றுக்கு உரியவாறான தீர்வு வழங்கப்படுவதும் அவசியம் என்று வலியுறுத்தியுள்ள பற்ரீஸியா ஸ்கொட்லன்ட், அதனை முன்னிறுத்தி தொடர்ந்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி பொருளாதார ரீதியிலான உதவிகள் அவசியமாகவுள்ள தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு உதவமுன்வருமாறு அவர் சர்வதேச சமூகத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

அதேவேளை பொதுநலவாய சாசனத்தின் கோட்பாடுகளுக்கு அமைவாக இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு பொதுநலவாய அமைப்பு தயாராக இருப்பதாகவும் அதன் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.