பாராளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு

204 0

புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்யும் காலப்பகுதியில் பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் பாராளுமன்ற பிரதானிகளின் கோரிக்கைக்கமையவே பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றது.

அதன் பிரகாரம் நாட்டில் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்ட நேற்றைய தினம் முதல் புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்துகொள்வதற்கான வாக்களிப்பு இடம்பெற இருக்கும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும்.

அத்துடன் பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்காக மேலதிக பொலிஸ் மற்றும் இரணுவ குழுக்கள் மற்றும் கலகம் அடக்கும் குழுக்களை அழைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம், இந்த காலப்பகுதியில் பாராளுமன்றத்துக்கு ; வெளியாட்கள் வருகை தருவது தடை செய்யப்படும் என பாராளுமன்ற அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

அத்துடன் பாராளுமன்றம் இன்று விசேடமாக கூட்டப்பட இருப்பதால், கூட்ட நடவடிக்கைக்கு முன்னர் பாராளுமன்ற சுற்றுவர பிரதேசத்தில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளவும் தியவன்ன வாவியில் கடற்படையின் ராேந்து நடவடிக்கைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு அறிவித்துள்ளது.