எதிர்க்கட்சி தலைவரை பிரதமராக நியமிக்குமாறு பரிந்துரை : தயாசிறி

135 0

பாராளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் நியமனம் குறித்து அவதானம் செலுத்தப்படும்.

எதிர்க்கட்சி தலைவரை பிரதமராக நியமிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை அடிப்படையாகக் கொண்டு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புதிய ஜனாதிபதிக்கான வேட்பு மனுக்கல் பரிசீலனை செய்யப்பட்டு,20ஆம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

புதிய ஜனாதிபதி தெரிவினை தொடர்ந்து பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் குறித்து அவதானம் செலுத்தப்படும். அரசாங்கம் ஒன்று இல்லாத பட்சத்தில் எதிர்க்கட்சி தலைவர் தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பது அரசியல் செயலொழுங்காக காணப்படுகிறது.

அதற்கமைய எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் புதிய அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். இவ்விடயத்தில் நபர் முக்கியமல்ல,எதிர்க்கட்சி தலைவர் பதவி தான் முக்கியமானது.அதற்கமைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

கட்சி தலைவர் கூட்டத்தில் பெரும்பாலான தரப்பினர் இதனையே வலியுறுத்தியுள்ளார்கள்.பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலைமையில் வெகுவிரைவில் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது அவசியமானது.நெருக்கடியான சூழ்நிலையை கருத்திற்கொண்டு சகல அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என்றார்.