பாதுகாப்பு படையினர் முழு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியேற்படும் – இராணுவ தலைமையகம்

139 0

அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலும் , வன்முறையைத் தூண்டும் வகையிலும் செயற்படுவதை ஆர்ப்பாட்டக்காரர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறில்லை நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பாதுகாப்பு படையினருக்கு முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என்று இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இராணுவ தலைமையகத்தினால் ;14 ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கடந்த 9 ஆம் திகதி கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் உட்பட, பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சிறு சிறு வன்முறைச் சம்பவங்களைத் தவிர, அக்காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க சட்ட மீறல்களோ கடுமையான வன்முறைகளோ இடம்பெறவில்லை.

பாதுகாப்பு பதவிநிலை தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா , முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் பல சந்தர்ப்பங்களில் அமைதியைப் பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கேட்டுக் கொண்டனர். அத்தோடு அரச கட்டடங்கள் உள்ளிட்ட சகல கட்டடங்களையும் பாதுகாக்குமாறும் வலியுறுத்தினர்.

கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , சபாநாயகர் மற்றும் கட்சி தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில் பாதுகாப்பு பதவிநிலை தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா , முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டதோடு , நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

இதன் போது அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபடாமல் , பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காதவரையில் உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தாமல் , குறைந்தபட்ச அதிகாரங்களை பயன்படுத்தி அவர்களை கட்டுப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அமைதியான போராட்டக்காரர்கள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாக, துரதிர்ஷ்டவசமாக, ‘அகிம்சை’ அணுகுமுறையை விட்டு, அந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு குழு சட்டம் ஒழுங்கை உடைத்து, சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் வன்முறையாக செயற்பட்டது.

அது மாத்திரமின்றி நாட்டில் மக்கள் இறையாண்மை மற்றும் அரசியலமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்டுள்ள ஜனநாயக விழுமியங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரே இடமான பாராளுமன்ற வளாகத்தைக் கைப்பற்றும் நோக்கில், கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு தரப்பினரின் வீதித் தடைகள் போன்றவற்றை இடித்துத் தகர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த இராணுவ வீரர்கள் மீது கடும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதோடு , அவர்களது துப்பாக்கியும் சூரையாடப்பட்டன. இதனால் படுகாயமடைந்த இராணு வீரர்கள் கவலைக்கிடமான நிலைமையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பதிலுக்கு, இராணுவத்தினர்  குறைந்தபலத்தினை பிரயோகித்து வான் நோக்கி பல துப்பாக்கிச் சூடுகளை நடாத்தியதுடன் ; இராணுவ வீரர்களுக்கும் பொலிஸாருக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் மற்றவர்களையும் தூண்டிக்கொண்டிருந்த சில கட்டுக்கடங்காத வன்முறை பிரிவினரை தடுத்து நிறுத்தினர்.

எவ்வாறாயினும், பொலிஸாருடன் இராணுவத்தினர் இணைந்து, புதன்கிழமை இரவு வரை குறைந்தபட்ச பலத்தினை பிரயோகித்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் குறித்த வன்முறை பிரிவினரை கலைத்து பாராளுமன்றத்திற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

வன்முறைச் செயல்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஆயுதப் படைகள் அல்லது பொதுச் சொத்துக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் உள்ள போராட்டக்காரர்களை அனைத்து வகையான வன்முறைகளில் இருந்தும் உடனடியாக விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன் பொதுச் சொத்துக்கள், முக்கிய நிறுவனங்கள் மற்றும் மனித உயிர்களுக்கு பாதுகாப்பு தேவை என கருதினால், அவைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆயுதப் படை உறுப்பினர்கள் தங்கள் பலத்தினை பிரயோகிக்க சட்டப்பூர்வமாக அங்கிகாரம் பெற்றுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.