பாராளுமன்ற வளாக ஆர்ப்பாட்டத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை – காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள்

192 0

பாராளுமன்ற வளாகத்திலும் , சபாநாயகரின் உத்தியோகபூர் இல்ல வளாகத்திலும் வன்முறையான வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் இலக்கு கட்டடங்களை கைப்பற்றுவதல்ல என்பதால் , அரசியலமைப்பு ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பில் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அநுருத்த பண்டார அவரது முகநூலில் வெளியிட்டுள்ள காணொளி பதிவில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

சில தரப்பினர் பாராளுமன்ற வளாகத்திற்கும் , சபாநாயகரின் உத்தியோக இல்ல வளாகத்திற்கும் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பெருந்திரளானோர் காலி முகத்திடலுக்கு வருகை தருகின்ற அதே சந்தர்ப்பத்தில் , ஏனைய சிலர் அவர்களை வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரையில் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் என்பவை ஆர்ப்பாட்டக்காரர்களினால் அல்லது பொது மக்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

எனினும் தொடர்ந்தும் கட்டடங்களைக் கைப்பற்றுவது ஆர்ப்பாட்டங்களின் இலக்கு அல்ல.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் உரிமை நிச்சயம் காணப்படுகிறது. ஆனால் பலவந்தமாக கட்டடங்கள் அல்லது தனியார் நிறுவனங்களுக்குள் பிரவேசித்தல் போன்றவற்றை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.

நாம் அவ்வாறானவர்களை விட அறிவுபூர்வமாக சிந்தித்து , திட்டமிடலுடன் செயற்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் நாம் அவர்களின் செயற்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். இவ்வாறான செயற்பாடுகளை இடை நிறுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே மேற்குறிப்பிடப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களது ஆதரவையும் இழக்க நேரிடும்.

எனவே ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் அரசியலமைப்பின் பிரகாரம் 6 நாட்கள் என்ற குறுகிய காலத்திற்கு சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக வேண்டும் என்பதே காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் உத்தியோகபூர்வ குழுவின் இலக்காகவுள்ளது. இந்நிலையில் சபாநாயகரின் இல்லத்தையும் முற்றுகையிட நடவடிக்கை எடுத்தால் அது பொறுத்தமற்ற செயற்பாடாகும்.

அத்தோடு ஜனாதிபதி பதவி விலகாமல் இருப்பதற்காக சபாநாயகருக்கு அழுத்தம் பிரயோகிப்பது நியாயமற்றதாகும். எனவே வன்முறை கும்பலுடன் இணைந்து எவரும் அவரவர் பாதுகாப்பினை கேள்விக்குள்ளாக்கிக் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.