மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 28-ந்தேதி முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன்

201 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 28-ந்தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி சார்பில் விவசாயிகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் திருச்சியில் இன்று நடைபெற்றது. முன்னதாக தமிழகத்தில் வறட்சியினால் காவிரி நீர் வறண்டு பயிர்கள் கருகியதை பார்த்து அதிர்ச்சியில் மரணமடைந்த 200 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:-

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சியினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பலர் தற்கொலை செய்துள்ளனர். இந்த நேரத்தில் தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க உள்ளார். அவர் முதல்வராக பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்தாக விவசாயிகளை காப்பாற்றும் வகையில் அனைத்து விவசாயிகளின் கடன்களை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யும் அறிவிப்பில் முதல் கையெழுத்து போட வேண்டும்.

மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். விவசாயத்தை காக்கும் வகையில் பாசனத்திற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். விவசாயத்திற்கென தனி பட்ஜெட் வெளியிட வேண்டும். இந்த அறிவிப்புகளை சசிகலா வெளியிட வேண்டும். மத்திய அரசு வறட்சியினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை.

வார்தா புயல் பாதிப்பு நிவாரணத்தையும் வழங்கவில்லை. இவற்றை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பாலாறு, முல்லை பெரியாறு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் பேசும் போது, தமிழக அரசு வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயிகளுக்காக போராடும் என்றார்.