பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் பொலிஸாரினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டமை கண்டிக்கத்தக்க செயற்பாடாகும். இந்த தாக்குதல் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கொழும்பில் கடந்த 9ஆம் திகதி சனிக்கிழமை மாலை பிரதமர் ரணில் வி்க்கிரமசிங்கவின் வீட்டுக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நேரடியாக செய்தி வழங்கிக்கொண்டிருந்த சிரச, சக்தி ஊடகவலையமைப்பின் ஊடகவியலாளர்கள் ஏழுபேர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஊடக நிறுவனத்தைக் குறிக்கும் வகையில் .மேலாடையும் அடையாள அட்டைகளையும் தாங்கியிருந்த ஊடகவியலாளர்கள் மீது இத்தகைய மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை ஊடக சுதந்திரத்தை முற்றாக மழுங்கடிக்கும் செயற்பாடாகவே அமைந்திருக்கின்றது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய தாக்குதல்கள் அண்மைக்காலமாக தொடர்ந்து வருகின்றன. படையினரும் பொலிஸாரும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் நன்கு அவதானம் செலுத்தி அவர்களது கடமைகளை தங்குதடையின்றி செய்வதற்கு வழிவகை செய்யவேண்டியது அவசியமாகும்.

