புகையிரத கட்டண அதிகரிப்பு குறித்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் முக்கிய அறிவிப்பு

236 0

சட்ட சிக்கலை அடிப்படையாகக் கொண்டு நாளைமறுதினம் நள்ளிரவு முதல் அமுல்படுத்தவிருந்த புகையிரத கட்டண அதிகரிப்பு மறு அறிவித்தல் வழங்கும் வரை பிற்போடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பேரூந்து கட்டண அதிகரிப்பிற்கமைய புகையிரத கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டதற்கமைய புகையிரத கட்டணத்தை திருத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியது.

அதற்கமைய புகையிரத சேவையில் தற்போது 10 ரூபாவாக காணப்படும் ஆரம்ப கட்டணத்தை 20 ரூபாவாகவும்,இரண்டாம் வகுப்பிற்கான ஆரம்ப கட்டணத்தை 50 ரூபாவாகவும் நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.இருப்பினும் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சட்ட சிக்கல் தோற்றம் பெற்றுள்ளதால் கட்டண அதிகரிப்பை மறு அறிவித்தல் விடுக்கும் வரை இடை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

புகையிரத கட்டணம் கடந்த 2018ஆம் ஆண்டு இறுதியாக திருத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.எரிபொருள் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகிய காரணிகளின் நிமித்தல் புகையிரத கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என புகையிரத திணைக்களம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.