இலங்கையின் இன்றைய நெருக்கடியின் மூலகர்த்த யார்?

171 0

நீண்ட கால திட்டமிடல் காலவரையற்ற குறுகிய நோக்கினால் குறைத்து மதிப்பிடப்படுகிறது”.

பீட்டர் தியேல் – ஜெர்மன்-அமெரிக்க பில்லியனர் தொழிலதிபர்

யாராக இருந்தாலும் – மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், பொருளாதார நிபுணர், அரசியல்வாதி அல்லது வேறு யார் ஆனாலும், ஒரு பிரச்சினைக்கான மூல காரணத்தை கருத்தில் கொள்ளவில்லை என்றால், அவர்களால் ஓர் நிரந்தர தீர்வைக் கண்டுபிடிக்க முடியாது. இலங்கையில் கடந்த பல மாதங்களாக நீடித்து வரும் பிரச்சினைக்கான மூல காரணத்தை கண்டறிந்து அணுக வேண்டும். இக் கட்டுரையானது, பல தசாப்தங்களாக நீண்டகாலத் திட்டத்தை வகுத்து, இலக்கை அடைவதற்காக கையாளும் குற்றவாளியை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பலரால் உணரப்படவில்லை.

இன்றைய நெருக்கடியின் அடித்தளம் 60களில் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமராக இருந்தபோது இடப்பட்டது. திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கணவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1960 இல் அவரது அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று, திருமதி பண்டாரநாயக்க பிரதமராக பதவியேற்றார். அவர் 1960 முதல் 1965 வரை பிரதமராக பணியாற்றினார். இவ்வேளையில், தீர்க்கப்படாத காலனித்துவ விவகாரங்களிலிருந்து இலங்கைதீவை இடதுசார சோசலிச பாதையிலிட முயற்சித்தார்.

இவ் தீவை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு காலம் நேரம் பார்ந்திருந்தவர்களுக்கு, திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரதமர் பதவி காலம் வழி வகுத்தது. இலங்கையில் இன்றைய நெருக்கடியின் ஆரம்பம் அதுவே. இக்கட்டுரை எந்த வகையிலும் இலங்கையில் உள்ள இடதுசாரிகளையோ அல்லது சோசலிஸ்டுகளையோ குற்றம் காணுவது நோக்கமில்லை.

இந்தியப் பிரதமர்களான – ஜவஹர்லால் நேரு, குல்சாரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் திருமதி இந்திரா காந்தி ஆகியோருடன் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க நல்லுறவைக் கொண்டிருந்தாலும், அவர் படிப்படியாக சீனா மற்றும் பாகிஸ்தானை நோக்கி நகர்ந்தார் என்பதே யாதார்த்தம்.

1963ம் ஆண்டும், மற்றும் 1972 ஆம் ஆண்டுகளில், திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க சீன மக்கள் குடியரசுக்கு விஜயம் செய்து, அங்கு சீனவின் முக்கிய தலைவர்களான – மா சே துங், சுஎன்-லாய் போன்றவர்களை சந்தித்தார். பதிலுக்கு சீனத் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தனர். இதே போல் பாகிஸ்தான், முன்னைய சோவியத் யூனியன் தற்போதைய ரஷ்யாவுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கையின் உறுப்புரிமை விண்ணப்பத்திற்கு எதிராக சோவியத் யூனியன் இரண்டு முறை (18 ஆகஸ்ட் 1948 ரூ 13 செப்டம்பர் 1949) வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியிருந்தது. இதனால், அன்றைய சோவியத் யூனியனுக்கும் இலங்கைக்கும் இடையே நல்ல உறவு அறவே இருந்திருக்காவில்லை.

இலங்கையின் முக்கியத்துவம்

இலங்கையின் நெருங்கிய அண்டை நாடான இந்தியாவுடன் சீனாவின் நீண்டகால விரோதப் போக்கு, இலங்கையில் ஆதிக்கம் செலுத்த கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வாய்ப்பையும், சீனா பயன்படுத்துகிறது என்பதே யாதார்த்தம்.

1960ன் பிற்பகுதியில், சீனா இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதற்கான முதல் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி – ஐ.தே.க அவ்வேளையில் ஆட்சியில் இருந்தபோது, இலங்கையில் சீன சார்பு அரசாங்கத்தை நிலைநிறுத்துவதற்காக சீனா மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்ததுள்ளது.

பின்னர் ’69ன் பிற்பகுதியிலும், 70ன் முற்பகுதியிலும், ‘சே குவேரா’ என்றும் அழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) எனப்படும் சீன சார்பு குழு, அப்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க தயாராகி வருவதாக இலங்கை காவல்துறை அரசாங்கத்தை எச்சரித்தது. மே 1970ல், திருமதி பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்தபோது, ஜே.வி.பி அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கான ஆயுதக் கிளர்ச்சியைத் தொடங்குவதற்கான இறுதிக் கட்டத்தில் இருந்ததுள்ளது.

இவ் ஜே.வி.பியின் ஆயுதப் போராட்டத்திற்கான ஆயுதங்கள் இரண்டு வழிகளில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டன. ஒன்று மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் பெயரால் சீனாவினால் நன்கொடையாக கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்ட (பி.எம்.ஐ.சி.எச்) நினைவு மண்டபம் மூலமாக. அதாவது, இவ் மண்டபம் கட்டுவதற்காக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்கள், எந்தவித கட்டுபடுகள் சம்பிரதாயங்களுக்கும் செல்லாமல் அனுமதிக்கப்பட்டன. இதன் மூலம் ஜே.வி.பி.யின் சில ஆயுதங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்பட்டது.

மற்றொரு வழி – மே 1970 இல், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு – (வட கொரியா) இலங்கையுடன் உறவுகளை ஏற்படுத்தி, கொழும்பில் ஒரு தூதரகத்தை திறந்ததுள்ளது. இவ் தூதுதரகம் மூலம் விநியோகித்த சில வெளியீடுகள் ஜே.வி.பியின் ஆயுதப் போராட்டத்தை வளர்க்க உதவியுள்ளது. ஜே.வி.பியினரையும் வட கொரியர்களும் இணைத்து செயற்பட்ட பல சம்பவங்களை, இலங்கை காவல்துறையினர் கவனத்தில் கொண்டுள்ளனர்.

இதேவேளை, மார்ச் 1971ல், வட கொரிய தூதரகம் வெளிநாட்டு வங்கி ஒன்றிலிருந்து, சுமார் 300,000 அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளதை, இலங்கை காவல்துறை கண்டுபிடித்ததுள்ளது. இருப்பினும், இந்த நிதியை அனுப்பியவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை தவறிவிட்டது. இறுதியில் 15 ஏப்ரல் 1971 அன்று வட கொரிய தூதரகத்தை நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு கட்டளையிட்டு வெளியேற்றியது.

ஜே.வி.பி.யின் முயற்சி

இந்த காலகட்டத்தில் தான்சானியாவுக்குச் செல்லும் சீன சரக்குக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்துள்ளது. இந்த சரக்குக் கப்பல் ஜே.வி.பி.க்கு ஆயுதங்களை எடுத்துச் சென்றது என்பதே உண்மை. இதே காலப்பகுதியில் ஜே.வி.பியினர் மிகவும் செல்வாக்கு பெற்ற மாத்தறை கரையோரப் பகுதியில், அறிமுகமில்லாத கப்பல் ஒன்று காணப்பட்டுள்ளது. இவை; அவ்வேளையில் இலங்கையின் கடலோரப் பகுதிகளில் ரோந்து சென்றன இந்திய போர் கப்பலால் கையாளப்பட்டன.

1971 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி, அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி ஆயுதப் புரட்சியை ஆரம்பித்தபோது, பிரதமர் திருமதி பண்டாரநாயக்க இந்தியா மற்றும் பிற நாடுகளின் உதவியை நாடினார். ஜே.வி.பி.யின் ஆயுதப் புரட்சி முயற்சி தோல்வியில் முடிந்தது. இருப்பினும், பண்டாரநாயக்கவின் நினைவு மண்டப கட்டிட வேலைகள் சிறப்பாக முன்னேறியதுடன், கட்டிடம் மே 1973 இல் திறக்கப்பட்டது.

ஜே.வி.பி.யின் முதல் முயற்சி தோல்வியடைந்ததால், அவர்கள் இரண்டாவது முயற்சியைத் தொடங்கினர்கள். இம்முறை, 1987ல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் (இலங்கை-இந்திய) கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி, மிக மோசமான வன்முறையான ஆர்பாட்டங்களை, கொழும்பிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மேற்கொண்டனர். உடன்படிக்கையை எதிர்க்கும் பெயரில் – கட்டிடங்கள் தீக்கிரை ஆக்கப்பட்டதுடன், பல வர்த்தக ஸ்தாபனங்கள் சூறையாடப்பட்டு கலவரங்கள் பல இடங்களிற்கு பரவியது.

அப்போதைய இந்திய சார்பு ஜனாதிபதியான, ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு எதிராக ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடர்ந்தது. ஆனால் ஜே.ஆர்.ன் பிரதமர் ஆர். பிரேமதாசா, ஒரு இந்திய விரோதியாக காணப்பட்டார். இவர் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியானார். பிரேமதாசாவின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான கொலை முயற்சி உட்பட பல அசிங்கமான வெட்கக்கேடான சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்றன.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான கொலை முயற்சியை, அவரது மனைவி சோனியா காந்தி உட்பட பல இந்திய இராஜதந்திரிகள், இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோரின் முன்னிலையிலேயே நடந்துள்ளது. மீண்டும் ஜே.வி.பி.யின் எழுச்சி, 1989 டிசம்பரில் தோல்வியடைந்து முடிவுக்கு வந்ததுள்ளது. இது சீனா தமக்கு சாதகமான ஓர் அரசாங்கத்தை இலங்கைதீவில் அமைப்பதற்கான இரண்டாவது முயற்சியாகும்.

1990ல் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்த வேளையில், அதையும் ஓர் சந்தர்ப்பமாக பாவித்த சீனா, இலங்கைக்கு தாராளமாக ஆயுதங்களை வழங்குவதற்கு முன் வந்துள்ளது.

நட்பு நாடுகள் அல்லது பிற நாடுகளால் வழங்கப்படும் ஆயுதங்கள் – அது தற்போதைய உக்ரேனாகா இருந்தாலென்னா, அல்லது முன்னைய இலங்கையாக இருந்தலென்ன, வழங்கப்படும் ஆயுதங்கள் எதுவும் நன்கொடைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆயதங்களை பெறும் நாடுகள், இறுதியில் ஆயதங்களை கொடுத்த நாடுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இது தான் யாதார்த்தம்.

இலங்கைதீவில் சீனாவின் முன்னைய முயற்சிகள் முற்றாக தோல்வியடைந்ததால், சீனா தனது உத்தியை மாற்றியது. இலங்கையை தமது ஆயுத விநியோகத்தில் முழுமையாக தங்கியிருக்க செய்ததுடன்; படிப்படியாக மில்லியன், பில்லியன் டாலர்களிற்கு இலங்கைக்கு ஆயுதங்களை வழங்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம், சீனா போன்ற நாடுகள், இலங்கையின் இனப்பிரச்சினையை மூன்று தசாப்தங்களாக தமது கபட நோக்கங்களுடன் நீடிக்க வைத்தன என்பதும் யாதார்த்தம்.

இனக்கலவரம் நீடித்தது

இவ் கபடமான ஆயுத விநியோக விவகாரங்கள், ‘திரைக்குப் பின்னால்’ நடக்கின்றன என்பதை இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் உட்பட பலர் உணரவில்லை. மூன்று தசாப்தங்களாக நீடித்த போரின் விளைவாக, தீவில் பல உயிர் இழப்புகள் உட்பட கடுமையான பொருளாதார சேதங்கள் ஏற்பட்டன. தென்னிலங்கையில் சலிப்படைந்த சில அரசியல் தலைவர்கள், அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்று மிக ஆழமாக யோசிக்கும் வேளையில், 2005 ஆம் ஆண்டு இலங்கையில் ஜனாதிபதியுடன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இங்கு ஜனாதிபதியினதும், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களின் பலவீணத்தைக் கண்டறிந்த சீனா, அதனைப் பயன்படுத்திக் கொண்டது. சீனா மேலும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை இலங்கைக்கு வழங்க தொடங்கி போரை தொடர வழிவகுத்தாதுடன், பல்வேறு விதிமுறைகள் நிபந்தனைகளின் கீழ், பெரும் தொகையான கடன்களை இலங்கைக்கு வழங்கியது. அதேவேளை, ஜனாதிபதியையும் அவரது குடும்ப உறுப்பினர்கள்; மற்றும் வேண்டப்பட்டவர்களையும் சீனா பல விதங்களில் நன்றாக கவனித்தார்கள்.

இது சிறிலங்காவில் சீனாவின் அழுங்கு பிடியின் ஆரம்பமாக காணப்பட்டது. சீனாவின் முழு ஆயுதப் விநியோகத்துடன், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் ஈடுபாட்டுடனும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

உலகின் எதிரி நாடுகளாக கணிக்கப்பட்ட – அமெரிக்கா வட கொரியா மற்றும் சீனாவுடனும்; இந்தியா பாகிஸ்தான் சீனாவுடன் ஒருங்கிணைந்து; இலங்கையில் தமிழர்களின் ஆயுத போராட்டத்தை – தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை வெற்றிகரமாக அழித்தனர் என்பது சரித்திரம்.

தமிழர்களின் ஆயுத போராட்டத்தை அழிப்பதற்கு முன்னின்று உழைத்தவர்கள், இந்தியா உட்பட சர்வதேசம் என்ற உண்மை யாதார்த்தை அறியாத தெற்கில் உள்ள மக்கள், ராஜபக்ஷ குடும்பத்திற்கு கண்மூடித்தனமாக ஆதரவளித்தனர். அவர்களில் பெரும்பாலனோர் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, ‘போரின் கதாநாயகர்கனென’ நம்பினார்கள்.

சீனா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதுடன், ராஜபக்ச குடும்பத்தை நன்றாகக் கவனித்துக் கொண்டு, தமக்கு சாதகமாக பல ஒப்பந்தங்களை வெற்றிகரமாக நிறைவேற்றினர். இதனை தொடர்ந்து ராஜபக்சா குடும்ப உறுப்பினர்கள், சீனாவிற்கு அடிக்கடி பயணம் செய்ததுடன், சீனாவின் நீண்ட கால கனவை நிறைவேற்றுவததற்கு துணை போனார்கள். ராஜபக்சேவின் குடும்பத்தின் உதவியுடன் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் செழிக்கத் தொடங்கியது.

2015 இல் இலங்கையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் எதிர்பாராத மாற்றத்தை தொடர்ந்து ராக்கபக்சாக்கள், சீனாவின் சிறிலங்கவிற்கான நிதி ஆலோசகர்களானார்கள். 2015 – 2019 ஆம் ஆண்டுகளில், ஆட்சியில் இல்லாத மகிந்த ராஜபசாவும், அவரது சகோதரரான கோத்தஹய ராஜபக்சவும், தொடர்ச்சியாக சீனாவிற்கு விஜயம் செய்து, சிறிலங்காவில் சீனா எப்படியாக தெற்கு பிரதேசத்தை கைப்பற்றலாம் போன்ற ஆலோசனை வழங்கினர்.

அம்பாந்தோட்டை 99 வருட குத்தகைக்கு

ராஜபக்சாக்களினால், கண்மூடித்தனமாக பெறபெற்ற சீனாவின் கடன்களுக்கு, அவ்வேளையில் அதிகாரத்தில் இருந்த நல்லாட்சி என்ற பொய்யாட்சி மீது அழுத்தங்கள் அதிகரித்தது. அவ் கடன்களுக்கான தீர்வாக, அம்பாந்தோட்டையை சீனாவிற்கு தொண்ணூற்றொன்பது வருட குத்தகைக்கு வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு பொய்யாட்சியை நிர்பத்தித்தனர். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் துறைமுகம் மற்றும் விமான நிலையம் ஆகியவை, அன்று சீனாவினாலே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் ஜூலை 2017ல், தென்னிலங்கையின் மூன்றில் ஒரு பங்கான அம்பாந்தோட்டையை சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் குத்தகை என்ற பெயரில் கொடுக்கபட்டுள்ளது. வேடிக்கை என்னவெனில், இனப்பிரச்சினை தீவிட்டு எரிந்த காலங்களில், சிறிலங்காவினால் சர்வதேச ரீதியாக கூறப்பட்டு வந்துள்ள சிறிலங்காவின் ‘இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு’, இன்று சீனாவிற்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஜே.வி.பி மற்றும் பலரது மௌனம் சந்தேகத்திற்குரியது.

இங்கே, இந்திய இராஜதந்திரம் கேலியாக்கபட்டுள்ளது. 1974ல் இந்தியா தனது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளில் ஒன்றான ‘கச்சைத்தீவை’, இலங்கைக்கு தானாக முன்வந்து நன்கொடையாக வழங்கிய அதே சமயம் – தென்னிலங்கையின் கணிசமான பகுதியை, ராஜதந்திரம் நன்றாக தெரிந்து கைதேர்ந்த சீனா கைப்பற்றியுள்ளது. அதாவது, இலங்கையில் இந்தியவின் இராஜதந்திரம் பல விதங்களில் தோல்வியடைந்து வருகிறது என்பதே உண்மை, யாதார்த்தம்.

ஏதோ விதமாக, 2019 இல் ராஜபக்சாக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் ஆகிய இரண்டும் அவர்களது கையிலேயே. ஏற்கனவே மிக நெருக்கமான நண்பர்களான சிறிலங்காவும் மீண்டும் சீனாவும், தமது பித்தலாட்டங்களை ஆரம்பித்தனர். சீனா ஏதோ ஒரு விதமாக, தமிழ் மொழிக்கு பதிலாக சீன மாண்டரின் மொழியை சிறிலங்காவில் நாலா புறமும் விஸ்தரிக்க ஆரம்பித்தனர். இலங்கையில் உள்ள – வீதிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அரச கட்டிடங்கள், கொழும்பு துறைமுக நகரம் போன்றவற்றின் பெயர் பலகைகள், அடையாள பலகைகள் யாவற்றிலும் சீனாவின் மாண்டரின், சிங்களம், மற்றும் ஆங்கிலம் மட்டுமே காணப்படுகிறது. இலங்கைதீவில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழும் மொழியான தமிழ், திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறது.

ராஜபக்சா குடும்பத்தின் தவறுகளுக்கும் பேராசைக்கும், சீனாவின் தலைகீழ் செயற்பாட்டிற்கும், இப்போது நாட்டின் அப்பாவி குடிமக்கள் – உணவு, மருந்து, மின்சாரம், பெட்ரோல் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் அதிக விலை கொடுத்தும் கிடைக்காத நிலையில் தவிக்கிறார்கள்.

இலங்கையில் ஜனநாயகம் – உறவுமுறை ஆட்சிக்கும், ஊழலையும் சட்டப்பூர்வமாக்கியதுடன், ராஜபக்சாக்கள் தாம் சட்ட விரோதமாக பெற்று கொண்ட பல கோடி பெறுமதியான நிதியையும், சொத்துக்களையும், வெளிநாடுகளிற்கு கொண்டு சென்று, அங்கு முதலீடு செய்வதற்கு வழி வகுத்துள்ளது..

சிறிலங்காவுடனான சீனாவின் உறவு என்பது, என்றும் கள்ளம் கபடம் நிறைந்ததாகவும், மற்றவர்கள் சந்தேகிக்க கூடியதாகவுமே காணப்படுகிறது.

இன்று ஐசக் நியூட்டனின் கோட்பாடு சிறிலங்காவில் வேலை செய்யத் தொடங்கியுள்ளது. – ‘எது எல்லை வரையின்றி உயர்ந்தாலும், இறுதியில் கீழே வந்தே ஆக வேண்டும்…’. ராஜபக்சேக்களின் ‘கர்மா’- மற்றும் சிறிலங்காவில் தமது நட்பை துஸ்பிரயோகம் செய்த சீனா, ஆகிய இருவரின் இருண்ட இறுதி நாட்கள் வந்துவிட்டது போல் தென்படுகிறது..

இந்தக் கட்டுரையை எழுதும் போது, முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னத்தவின் ஒர் செவ்வியை ஆங்கில செய்தித் தாழில் படித்தேன். இதுவும் சீனாவின் ஓர் நிகழ்ச்சி நிரலா, அல்லது என்ன என்று வியப்படைகிறேன்? இந்த நேர்காணலை அலசி ஆராய்ந்து தொலைநோக்கியில் பார்க்க வேண்டும். இவ் செவ்வியில், ஆழமான ஆபத்து பதுங்கியிருக்கிறது. இவ் செவ்வியின் உள்ளடக்கங்களை மறைத்து, அழகாக வர்ணங்கள் தீட்டப்பட்டு உண்மைகளை நசுக்காக மறைக்கப்பட்டுள்ளது. முன்னணி சோசலிசக் கட்சி, ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற குழுவாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்களும் காலி முகத்திடலில் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதி அமைப்பாளர்களாக உள்ளனர் என்பது ஓர் நல்ல செய்தி அல்ல்.

காலி முகத்திடலில், முள்ளிவாய்காலை நினைவு கூருவதும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றுவதும், இலங்கையில் சமத்துவத்தையோ அல்லது சகவாழ்வையோ ஏற்படுத்தப் போவதில்லை என்பதை மூத்த அரசியல்வாதிகளும் ஏனையோரும் கவனத்தில் கொள்ள வேண்டும். மீண்டுமொருமுறை, இலங்கை தமிழர்களிற்கு இருந்து வரும் சர்வதேச அனுதாபத்தைத் திசைதிருப்பும் தந்திரமாக, இவை இருக்கலாம். தமிழர்கள் கஷ்டப்பட்டு கற்றது போதும். எனவே, தமிழர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றுவது எளிதல்ல.

  • ச.வி.கிருபாகரன், பிரான்ஸ்