பலாலி விமான நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படாமை குறித்து எனக்கு தெரியாது -பந்துல

252 0

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் , அவை குறித்த தினத்தில் இடம்பெறாமை குறித்து தனக்கு தெரியாது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எனவே இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான நிமல் சிறிபால டி சில்வாவிடம் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துமாறு அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ஜூலை முதலாம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கடந்த வாரம் அமைச்சரவை தீர்மானத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அடிப்படை சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு பலாலி விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகள் 2019 நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் கொவிட் 19 தொற்று நிலைமையால் அதன் நடவடிக்கைகள் 2020 மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாகப் பிற்போடப்பட்டன.

அவ்விமான நிலையத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையம் வரை வாடகை விமானத் தொழிற்பாடுகள் மற்றும் நேர அட்டவணைக்கமைவான விமானப் பயணங்களை மேற்கொள்வதற்காக சர்வதேச ரீதியாகவும் உள்ளுரிலும் நிறுவப்பட்டுள்ள விமானக் கம்பனிகள் தற்போது வேண்டுகோள்களைச் சமர்ப்பித்துள்ளன.

அதற்கமைய, பலாலி சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகளை ஜூலை முதலாம் திகதி முதல் ஆரம்பித்தல் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

எனினும் கடந்த முதலாம் திகதி அதற்கான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையிலேயே இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரால் இது குறித்து கேட்க்கப்பட்ட போது , அமைச்சர் இவ்வாறு பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.