எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பதிவாகும் தாக்குதல் சம்பவங்களுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
எவர் மீதான தாக்குதல்களையும் அனுமதிக்க முடியாது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதிவாகிய தாக்குதல் சம்பவத்தில் இராணுவ அதிகாரியின் மீது தவறு காணப்படுமாயின் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் இளைஞர் ஒருவரது மார்பில் இராணுவ அதிகாரியொருவர் காலால் எட்டி உதைத்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பல தரப்பிராலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இது குறித்து (05) செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பதிவாகும் தாக்குதல் சம்பவங்களுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
அரசாங்கம் அவ்வாறானவற்றுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்காது. எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் பாதுகாப்பிற்காகவே பொலிஸாரும் , இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதாள உலகக் குழுவினரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். எரிபொருளை பதுக்கி வைப்பவர்களே வன்முறைகளிலும் ஈடுபடுகின்றனர்.
எனினும் அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு எவரும் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லையே? சமூக வலைத்தளங்களில் ஒரு பகுதி காணொளி பதிவு மாத்திரமே பகிரப்படுகிறது.
எனவே பாதுகாப்பு படையினர் ஆரம்பத்திலிருந்து நடைபெறும் சம்பவங்களையும் காணொளி பதிவு செய்ய வேண்டும்.
காரணம் பாதுகாப்புபடையினர் மீதும் பல சந்தர்ப்பங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு தரப்பினரைப் பற்றி மாத்திரமின்றி அனைத்து தரப்பினர் பற்றியும் அவதானம் செலுத்த வேண்டும்.
இராணுவ அதிகாரியின் தாக்குதலுக்கு உள்ளான நபர் எரிபொருளைப் பதுக்குபவர் என்று தெரிவிக்கப்படுகிறது. இது குறித்தும் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.
அதே போன்று இந்த சம்பவத்தின் போது குறித்த இராணுவ அதிகாரி தவறிழைத்திருப்பாராயின் , அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எவ்வாறிருப்பினும் எவர் மீதான தாக்குதல்களையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.

