பொலன்னறுவை ; வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலைய கைதியின் சந்தேகத்துக்கு இடமான மரணம் கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலன்னறுவை வைத்தியசாலையில், குறித்த கைதியின் சடலம் மீது, பொலன்னறுவை நீதிவான் பாத்திமா மின்ஹாவின் உத்தரவுக்கு அமைய விஷேட சட்ட வைத்திய நிபுணர் ; யூ.எல். சுரங்க பெரேரா முன்னெடுத்த பிரேத பரிசோதனைகளிலேயே இந்த விடயம் இன்று ( 5) வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கைதி, தட்டையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அதன்பலனாக கைதியின் உடலின் உட் பகுதியெங்கும் ; தர்வுக் காயங்கள் உள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட நிலைமைகளால் மரணம் சம்பவித்துள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில், அந் நிலையத்தின் ஆலோசகர்களாக செயற்பட்ட ; நான்கு படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை – ஹாலி எல – தெமோதறை பகுதியை சேர்ந்த 35 வயதான குறித்த கைதியின் சந்தேகத்துக்கு இடமான மரணம் தொடர்பில் இரு இராணுவத்தினரையும், இரு விமானப்படையினரையும் வெலிகந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் குறித்த நால்வரின் வாக்குமூலத்துக்கு அமைய, கைதியை தாக்க பயன்படுத்தியதாக நம்பப்படும் வயர் மற்றும் மூங்கில் பொல்லுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலைய ஆலோசகர்களாக கடமையாற்றிய விமானப்படையின் சார்ஜன் தர அதிகாரிகளான ; 35 வயதுடைய கோட்ட பிட்டிய பகுதியைச் சேர்ந்தவரும் ; 36 வயதான நாவலபிட்டியைச் சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர். கைதான இராணுவ அதிகாரிகளில் ஒருவர் ஸ்டாப் சார்ஜனான 39 வயதுடைய கல்னேவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றையவர் சார்ஜன் தர அதிகாரியான 37 வயதுடைய ஹுரிகஸ்வெவயைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர்கள், தாக்குதல் மற்றும் கொலை குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2 ஆம் திகதி பொலன்னறுவை நீதிவான் பாத்திமா மின்ஹா முன்னிலையில் ஆஜர்ச் செய்யப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஓஷான் ஹேவாவித்தாரனவின் ; மேற்பார்வையில் வெலிகந்த பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த ரத்நாயக்கவின் கீழ் ; குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுமதிரத்ன உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்ப்ட்டு வருகின்ரமை குறிப்பிடத்தக்கது.

