வானை முட்டும் கோபுரம்! உலகின் அதிசயங்களில் இணையுமா இலங்கை?

221 0

உலகளாவிய ரீதியில் பேசப்படும் அளவில் World Capital Center திட்டம் ஆரம்பிக்கப்படும் என பிரமாண்டான வகையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த திட்டத்திற்கான அடிக்கல் கடந்த நான்காம் திகதி நாட்டப்படும் என, WCC திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இதுவரை குறித்த திட்டம் ஆரம்பிக்கப்படவில்லை.

இது தொடர்பில் வினவுவதற்காக செயற்றிட்டத்தை முன்னெடுக்கும் கூட்டு நிறுவனத்தை தொடர்புகொள்ள முயற்சித்த போது, குறித்த நிறுவனத்தின் தொலைப்பேசி இலக்கம் இயங்கவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பு 2இல் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கூறப்பட்ட இந்த பாரிய கட்டடம் 117 மாடிகளை கொண்டதாகும். அது நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் தெற்காசியாவின் மிக உயரமான கட்டடமாக பெயரிடப்படும் என பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

625 மீற்றர் உயரத்திலான இந்த கட்டடம் இரண்டு கோபுரங்களை கொண்டதெனவும், உலகின் 9வது உயரமான கட்டடமாகும் எனவும் குறிப்பிடப்பட்டது. எனினும் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்படும் இடம் தொடர்பில் எவ்வித தகவல்களும் உரிய முறையில் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்த திட்டத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கமைய குறித்த திட்டத்தை அல் அமான் கூட்டு நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கு நாட்டின் நிறுவனமான காணப்பட்ட நிலையில், 2001ஆம் ஆண்டு இலங்கையில் குறித்த நிறுவனத்தின் கிளை திறக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச வர்த்தக நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அல் அமான் World Capital Centerஇன் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த திட்டம் தொடர்பிலான தகவல்கள் பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.