நாட்டை நாசம் செய்த திருடர்களுடன் எமக்கு டீல் இல்லை

159 0
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறினாலும், தற்போது நாட்டின் தேசியப் பாதுகாப்பு முற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தேசிய பாதுகாப்பாக கருதியது இராணுவப் பாதுகாப்பை மாத்திரமே தவிர பொருளாதார, கல்வி, சுகாதாரம், விவசாயப் பாதுகாப்பை அல்ல எனவும், இதன் காரணமாக எமது நாடு தற்போது வறிய நாடாக உலகளவில் அபிமானத்தை இழக்க நேரிட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (30) தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற போர்வையில் தேசிய பாதுகாப்பாக இராணுவமயமாக்கலை கருதியதாகவும் இதன் காரணமாக தேசிய பாதுகாப்பின் உண்மையான அர்த்தமான கல்வி, சுகாதாரம், விவசாயப் பாதுகாப்பு இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வெளிநாடுகளிடமிருந்து உதவிகள் கோரி யாசகம் கேட்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இவ்வாறு யாசகம் கேட்கும் நிலைமையால் நம் நாட்டின் வளங்கள் பெரும் ஆபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், அதே ஆபத்தை எதிர்கொண்டுள்ள போதிலும் கூட ஆட்சியாளர்கள் திருட்டு, மோசடி, ஊழல் போன்றவற்றை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே நாட்டில் இவ்வாறானதொரு நிலைமையை உருவாக்கியுள்ள தற்போதைய அரசாங்கத்துடன் நாம் ஒருபோதும் கூட்டு ஆட்சி அமைக்க மாட்டோம் என தெரிவித்த அவர், அவ்வாறு செயற்பட்டால் அது மக்கள் போராட்டத்திற்கு செய்யும் துரோகமாகும் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், தற்போதைய ஜனாதிபதி, ராஜபக்ஸ குடும்பம் மற்றும் ஊழல், மோசடிகளுக்கு உள்ளானவர்களை விரட்டியடித்து அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை பலப்படுத்தி பங்கேற்பு சார் அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை நாட்டில் ஸ்தாபிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பங்கேற்பு அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மக்களுக்கும் தீர்மானம் எடுக்கும் செயல்முறையில் பங்கேற்க முடியுமான வகையில் தேசிய சபையொன்றை நிறுவி, மாதத்திற்கு ஒருமுறை அதன் நடவடிக்கைகளை செயலுக்கு கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தில் ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் இல்லாத நேர்மைமிக்க கொள்கை ரீதியான அரசியல்வாதிகள் ஒருசிலர் இருப்பதாகவும் அவர்களுடன் எதிர்காலங்களில் ஒத்துழைப்புடன் செயற்பட தயார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிகழ்ச்சி நிரலின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (30) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.