கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

271 0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியபோது நீதவான், விளக்கமறியலை நீடித்து உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த கொலையுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான எட்வின் சில்வா,   முன்னாள் உறுப்பினர்களான ரெங்கசாமி கனகநாயகம், கிருஸ்ணானந்தராஜா, மற்றும் இராணுவ புலனாய்வில் பணியாற்றிய எம்.கலீல் ஆகியோர் மீதான விளக்கமறியலும் அதே நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.