இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளால் தேவையற்ற நிதிச் சுமையை தாங்க வேண்டியுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கண்டி அஸ்கரி பீடத்தின் மகா நாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் மற்றும் மல்வத்துபீட மகா நாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகியோரை நிதியமைச்சர் சந்தித்தார்.
அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மக்களுக்கான நிவாரணம் வழங்கியமை குறித்து மகாநாயக்கர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அரிசி விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால் நெருக்கடி நிலை உருவாக்கியுள்ளதை ஏற்றுக்கொண்ட நிதியமைச்சர், அதற்கு தீர்வொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டுவருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் சலுகைகளை வழங்கியுள்ள போதிலும் அதன் நன்மைகளை மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் சலுகைகளை மக்களுக்கு வழங்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கிவருவதாகவும் வாழ்க்கை செலவை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ரவி கருணாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

