எரிபொருள் நெருக்கடிக்கு சிறந்த தீர்வு – ஜேர்மன் பெண்ணின் புதிய வடிவமைப்பு

52 0

இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் எரிபொருள் தட்டுப்பாடும் ஒன்று. இதன்படி, எரிபொருள் சிக்கலைத் தீர்க்க உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டியை உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் நிறுவனர் ஒரு ஜேர்மன் பெண் ஆவார். சுமார் 27 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த உலா மாஷ்பெர்க், இந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அழகின் மீது கொண்ட நேசம் காரணமாக உனவடுனாவை வாழத் தேர்ந்தெடுத்தார்.

புதிய படைப்புகளை உருவாக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பர்களின் உதவியுடன் ‘சேவ் எவர் ஸ்ரீலங்கா’ என்ற அமைப்பையும் நிறுவியுள்ளார். தனது வடிவமைப்பு குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

“புள்ளிவிவரங்களின்படி தற்போது இலங்கையில் 1.3 மில்லியன் முச்சக்கர வண்டிகள் உள்ளன. சூரிய ஆற்றல் மற்றும் பிற இயற்கையான புதுப்பிக்கத்தக்க பொருட்களில் அவற்றை இயக்குவதே எங்கள் முயற்சியாகும். அப்போது டீசல், பெட்ரோல் பயன்பாடு நூறு சதவீதம் குறைக்கப்படும்.

அரசாங்கம் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும். முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் நிறைய பணத்தை மீதப்படுத்த முடியும். அத்துடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அதிக அளவில் இருக்கும்.

இதை ‘சோலார் மல்லி’ என்கிறோம். சோலார் பேனல்கள் தயாரிப்பு உட்பட மற்ற அனைத்து பராமரிப்பு பணிகளையும் நாங்கள் செய்கிறோம். இப்போது எரிபொருளின் விலையால் சராசரி மனிதர்கள் கார் அல்லது மூச்சக்கர வாகனம் ஓட்டுவது கடினம்.

எரிபொருள் விலை உயர்வினால் முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிக்கின்றன. இதற்கு நல்ல தீர்வு எங்களுடைய ‘சோலா டக் டக் மல்லி’. இதற்கு எரிபொருள் தேவையில்லை.

சூரிய சக்தியில் இயங்கும் இந்த முச்சக்கர வண்டி ஜனாதிபதி, பிரதமர், கைத்தொழில் அமைச்சர் மற்றும் முப்படைத் தளபதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சோலார் மல்லிக்கு வீதியில் பயணிக்க அனுமதியில்லை.

எனவே, சோலார் மல்லி தேசியத் திட்டத்திற்கு அரசின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். சூரிய சக்தியில் இயங்கும் இந்த மூச்சக்கர வாகனத்திற்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளோம். எனினும், இதுவரை பெறப்படவில்லை. விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.