பொது நலவாய நாடுகளின் இலங்கைக்கான ஆதரவு தொடர்பில் ஆராய நியூசிலாந்து இணக்கம்

14 0

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு நியூசிலாந்து மற்றும் பொதுநலவாய நாடுகளின் ஆதரவு தொடர்பில் ஆராய்வதற்கு நியூசிலாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் பக்க அம்சமாக நியூசிலாந்து வெளிநாட்டலுவல்கள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் நனையா மஹூதா மற்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது கொழும்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்று வரும் பணியாளர் மட்ட கலந்துரையாடல்கள் மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து விநியோகம் தொடர்பாக இருதரப்பு நன்கொடையாளர்கள் ;மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து நாடு பெற்றுக் கொள்ளும் ஆதரவு குறித்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நியூசிலாந்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் விளக்கினார்.

அடுத்த சில வாரங்களில் நிதியைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார். நியூசிலாந்து மற்றும் பொதுநலவாய நாடுகளின் ஆதரவு தொடர்பில் ஆராய்வதற்கு நியூசிலாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இணக்கம் தெரிவித்தார். இலங்கையின் பால் கைத்தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த கைத்தொழில்களின் அபிவிருத்தி தொடர்பில் நியூசிலாந்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
கொவிட்-19 தாக்கத்தினால் இலங்கையில் பொருளாதார சவால்கள் எவ்வாறு மோசமடைந்துள்ளன என்பதையும் அவர் விளக்கினார்.

கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவமளித்து, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகிய துறைகளிலான ஒத்துழைப்பின் வாயிலாக கல்வியை வாழ்வாதாரத்திற்கான பொருத்தமானதாக நிலையாக மாற்றுவது குறித்து இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களுக்கு இலங்கை  ;மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் முக்கியத்துவம் அளித்துள்ள நிலையில், கடல் தொடர்பான பிரச்சினைகளில் ஒத்துழைப்பது குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர். நவீன உலகில் மனிதகுலத்தின் நன்மைக்கான சக்தியாக பொதுநலவாயத்தின் எதிர்காலம் பற்றிய ;எண்ணங்களை இரு அமைச்சர்களும் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது