தேர்வு முறையில் கோளாறு: இண்டிகோ விமான பயிற்சி மைய உரிமம் தற்காலிக ரத்து

319 0

இண்டிகோ விமான பாதுகாப்பு பயிற்சி மைய தேர்வு முறையில் கோளாறு நடந்துள்ளதை அடுத்து பயிற்சி மையத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இண்டிகோ விமான நிறுவனம், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மலிவு கட்டண விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமான இண்டர்குளோப் ஏவியேசன், விமான பாதுகாப்பு பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறது.

இந்த விமான பாதுகாப்பு பயிற்சி மைய தேர்வு முறையில் கோளாறு நடந்துள்ளது. அதாவது பல மாதங்களாக ஒரே ‘செட்’ கேள்வித்தாட்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் தேர்வும், எழுத்து தேர்வாக மாற்றப்பட்டு உள்ளது. இதை சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் (பிசிஏஎஸ்) கண்டறிந்தது. இது நம்பிக்கை மோசடி என குறிப்பிட்ட அதன் தலைவர் குமார் ராஜேஷ்சந்திரா, அந்த பயிற்சி மையத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “இந்த விமான நிறுவனம், எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல், கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வை எழுத்து தேர்வு முறையாக மாற்றி உள்ளது. எங்களின் சட்டதிட்டங்களை முழுமையாக பின்பற்றாவிட்டால், அதன் உரிமம் காலவரையின்றி ரத்து செய்யப்படும்” என கூறினார்.

இந்த இடைநீக்கத்தால், இண்டிகோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு, வெளியே பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது குறித்து இண்டிகோ செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் ஏற்கனவே சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தை தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களது திருப்திக்கு ஏற்ப செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.