பள்ளி மாணவனை அடித்து கொன்ற 3 சிறுவர்கள் கைது

19 0

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கல்லறை தோட்ட தெருவை சேர்ந்த ஸ்டீபன் மகன் மாதவன்(16). ராயப்பன்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 தேர்வு எழுதியிருந்தார். கடந்த 18-ந்தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற மாதவன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் 20-ந்தேதி அங்குள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தங்களது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாதவனுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதில் மதுரை செல்லூரை சேர்ந்த அல்லாபிச்சை(23) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து மாதவனை அடித்து கொன்றுவிட்டு கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவர்கள் அளித்த வாக்குமூலம் விபரம் வருமாறு: மாதவன் மற்றும் அல்லாபிச்சை, முகமது இஸ்மாயில் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய அனைவரும் மாலை நேரங்களில் ஒன்றாக விளையாடுவது வழக்கம். இந்த சிறுவர்களுக்கு மது மற்றும் கஞ்சா பழக்கம் இருந்துள்ளதால் அதனை வாங்கி வருவதற்காக மாதவனை பயன்படுத்தி வந்துள்ளனர்.

அதன்படி 17-ந்தேதி ரூ.1500 கொடுத்து மதுபானம், கஞ்சா மற்றும் சாப்பாடு வாங்கி வருமாறு அவர்கள் மாதவனை அனுப்பி உள்ளனர். ஆனால் மாதவன் மது வாங்கி வராமல் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மறுநாள் ஆத்திரத்தில் இருந்த அவர்கள் 3 பேரும் கத்தியால் குத்தி, தாக்கி கிணற்றில் வீசி சென்றுவிட்டனர். இதனையடுத்து அல்லாபிச்சையை தேனி சிறையிலும், மற்ற 2 சிறுவர்களும் மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.