இன்று முழு நாடும் அகதிகள் முகாமாக மாறியுள்ளது-சஜித்

140 0

இலங்கையினால் வெளியிடப்பட்ட இறையாண்மை பிணைமுறிக்கு முதலீடு செய்த அமெரிக்க வங்கியொன்று தனது பணத்தையும் வட்டியையும் தரக் கோரி மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதோடு, இது மிகவும் துரதிஷ்டவசமான நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று முழு நாடும் அகதிகள் முகாமாக மாறியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அலாவுதீனின் அற்புத விளக்கு போல தன்னிடம் ஓர் அதிசய விளக்குள்ளது என கூறிய பொருளாதார வல்லுனர்களின் உண்மை தன்மை இன்று வெளிப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தைப் புறக்கணித்தது குறித்து பிரதமர் கேள்வி எழுப்புகிறார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தமது தேசியப் பட்டியல் ஆசனத்தை ஓராண்டு காலம் வெற்றிடமாக வைத்துக் கொண்டு, ராஜபக்ஸக்களுக்கு தேவையான ஏற்ப்பாடுகளை செய்து கொடுத்தது பிரதமர் தானேயன்றி, ஐக்கிய மக்கள் சக்தி அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் இன்னல்களை அறியாத தர்மசங்கடத்திற்குள்ளான அரசாங்கம் பாராளுமன்றத்தை முட்டாள்தனமான ஒரு இடமாக மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று வெளிநாட்டு நீதிமன்றத்திலும் கூட நாடு பிரதிவாதியாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று (22) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.