இராட்டிங்கன் தமிழாலயத்தின் முத்துவிழா!

714 0

கடந்த 18.06.2022 சனிக்கிழமை அன்று இராட்டிங்கன் தமிழாலயத்தின் 30ஆவது அகவை நிறைவுவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. யேர்மனி தமிழ்க் கல்விக்கழகத்தின் வழிகாட்டலில் இயங்குகின்ற 110 இற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் இராட்டிங்கன் தமிழாலயமும் ஒன்றாகும். கல்வி, கலை, விளையாட்டு போன்றவற்றை கற்பித்து 30 ஆண்டுகள் கடந்துவிட்ட தமிழாலயம் முத்துவிழாவை கொண்டாடுவது பெருமகிழ்வை தருகிறது.

இந்நிகழ்வில் இராட்டிங்கன் துணைநகரபிதா, தமிழ்க் கல்விக்கழகத்தின் பொறுப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்கள், தாய் அமைப்பின் செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், நகரவாழ் மக்களென அனைவரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

சிறப்பு விருந்தினர்கள் அரங்கிற்கு அழைத்துவரப்பட்ட பின்னர், மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
30 வருடங்களின் நிகழ்வுகளையும், நினைகளையும் ஆவணமாக்கும் பொருட்டு முத்துவிழாச் சிறப்பிதழ் ஒன்று உருவாக்கப்பட்டது. தமிழாலயத்திற்காக உருவாக்கப்பட்ட தமிழாலய வாழ்த்துப்பா இசைக்க, பெற்றோர்கள், நகரவாழ் மக்கள் புடைசூழ பெற்றோர் பிரதிநிதி அச்சிறப்பிதழை கையில் தாங்கி அரங்கு நோக்கி வருவது மிகவும் சிறப்பான ஒரு காட்சியாக இருந்தது.

இவ்வாறாக சிறப்பிதழ் வெளியீட்டின் பின்னர் விருந்தினர்களின் வாழ்த்துரைகள், மாணவர்களின் நடனங்கள், பேச்சுகள், கவிதைகள், பாடல்கள், கவியரங்கம், பட்டிமன்றம், மதிப்பளிப்பு போன்றவை நிகழ்வை மென்மேலும் அழகுபடுத்தின. குறைந்த மாணவர் தொகையைக் கொண்டிருந்தாலும் அனைவரினதும் ஒத்துழைப்புடனும் ஆசியுடனும் அகவைநிறைவு விழா இனிதே நிறைவுபெற்றது.