கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு புதிய வாடகை- அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

125 0

சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கில் தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போர் மற்றும் கடைகள் வைத்திருப்போரின் வாழ்வுரிமை மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

இந்த மாநாட்டில் பங்கேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:- கோவில் நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு அல்லது சந்தை மதிப்பில் எது அதிகமாக உள்ளதோ அவற்றின் அடிப்படையில் வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று 2016-ம் ஆண்டு அப்போதைய இந்து சமய அறநிதலையத்துறை உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், தான் 2021-ம் ஆண்டு வரை வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் சதுர அடி கணக்கில் சந்தை மதிப்பில் வாடகை கணக்கிடும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிக வருவாய் வரக்கூடிய வணிகர்களும் நிலுவை வாடகை செலுத்த மறுத்து வருகின்றனர். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தான் கூட்டாக குடியேறியவர்கள் வாடகைதாரராக கருதும் படி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, கூட்டாக குடியேறிவர்கள் அந்தந்த கோயில்களில் தங்களை வாடகைதாரர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். நியாய வாடகை நிர்ணய குழு தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. நியாய வாடகை நிர்ணய குழு அடுத்த மாதம் இறுதிக்குள் புதிய வாடகையை நிர்ணயம் செய்து வழங்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.