மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஓரிரு தினங்களில் உத்தியோகபூர்வ அறிவிப்பு – பொதுபயன்பாட்டு ஆணைக்குழு

147 0

மின்னுற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ள பின்னணியில் மின்கட்டணம் நிச்சயம் அதிகரிக்கப்பட வேண்டும். மின்கட்டணம் அதிகரிக்கப்படும் விதம் இன்னும் ஓரிரு நாட்களில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் டொலர் அலகில் வருமானம் பெறும் சகல தேசிய நிறுவனங்களும் இனி டொலர் அலகில் ; மின்கட்டணத்தை செலுத்த வேண்டும் என இலங்கை மின்சார சபையிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது அமுலில் உள்ள இரண்டரை மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நீர்மின் மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் ஊடாக மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதால் எரிபொருள் பாவனைக்கான கேள்வி அதிகம் காணப்படவில்லை.

புனரமைப்பு பணிகளுக்காக பிரதான நிலக்கரி மின்நிலையங்கள் 75 நாட்கள் தொடக்கம் 80 நாட்களுக்கு மூடுவதனால் ; இழக்கப்படும் 270 மெகாவோட் மின்சாரத்தை சமநிலைப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நிலக்கரிக்கு மாற்றீடாக எரிபொருள் ஊடாக 270 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நிலக்கரி மின்நிலையங்கள் புனரமைக்கப்படும் காலப்பகுதியில் நாளாந்தம் 3 அல்லது 4 மணித்தியாலங்கள் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும்.நிலக்கரி ஊடாக மின்னுற்பத்தி சுமார் 75 நாட்களுக்கு இடை நிறுத்தப்படுவதால் எரிபொருள் ஊடாக மின்னுற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டியுள்ளது.

அதற்கமைய 2000ஆயிரம் மெற்றிக்தொன் பேர்னஸ் எண்ணெய்,2500 மெற்றிக் தொன் உராய்வு எண்ணெய் மற்றும் 500 மெற்றிக் தொன் டீசல் நாளாந்தம் அவசியமாகும்.தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை போதுமானதாக இருக்கும் ஆகவே எதிர்வரும் வருடத்திற்கு தேவையான நிலக்கரியை தற்போது இறக்குமதி செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.நிலக்கரி கொள்வனவிற்கு தற்போதைய விலைக்கமைய 600 மில்லியன் டொலர் அவசியம் என மதிப்பிடப்பட்டுள்ளது.உரிய நேரத்தில் நிலக்கரியை இறக்குமதி செய்யாவிடின் எதிர்வரும் வருடமும் பாரிய மின் விநியோக தடையை எதிர்க்கொள்ள நேரிடும்.

மின்னுற்பத்திக்கான கேள்வி மற்றும் செலவு அதிகரித்துள்ள நிலையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.மின்கட்டணம் நிச்சயம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.2013ஆம் ஆண்டிற்கு பிறகு மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

மின்கட்டணம் அதிகரிக்கப்படும் விதம் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.30தொடக்கம் 60 வரையில் மின் அலகினை பயன்படுத்தும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மின்கட்டணத்திற்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
டொலர் அலகில் வருமானத்தை பெறும் தேசிய நிறுவனங்கள் அனைத்தும் இனி டொலர் அலகில் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற யோசனையை இலங்கை மின்சார சபையிடமும்,அரசாங்கத்திடமும் முன்வைத்துள்ளோம் என்றார்.