பாடசாலை நடத்துவது தொடர்பில் குழப்பமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன: இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு

242 0

தற்போதைய நாட்டு நிலையை கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்தும், கல்வி அமைச்சு அதிகாரிகளும் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை எனவும் இதனால் தான் இவ்வாரம் பாடசாலை நடத்துவது தொடர்பில் குழப்பமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நாட்டில் எரிபொருள் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் நாட் கணக்கில் காத்து நிற்கின்றனர். இதில் அதிபர், ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல அவர்களும் நீண்ட வரிசைகளிலேயே நிற்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில் இவ்வாரம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருளை விநியோகிக்க முடியாது.

எனவே, மக்கள் வரிசைகளில் நிற்க வேண்டாம் என்றும் எரிசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.இதனை மையமாக வைத்தே கொழும்பு மாவட்டப் பாடசாலைகளையும், நகர்ப்புறப் பாடசாலைகளையும் ஒரு வாரம் மூடுவதென தீர்மானம் எடுக்கப்பட்டது.

எனினும், ஏனைய பாடசாலைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை.அதிபர், ஆசிரியர்களின் நிலையைப் புரிந்து கொள்ளாமல் எடுக்கப்பட்ட தீர்மானம் இதுவென்பது தெளிவாகத் தெரிகின்றது.

பாடசாலை நடத்துவது தொடர்பில் குழப்பமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன: இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு

பல ஆசிரியர்கள் அவர்களது வசிப்பிடத்திலிருந்து பல கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள பாடசாலைகளில் பணி புரிகின்ற அநேகமானோர் மோட்டார் சைக்கிள்களையே தமது பயணத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

எரிபொருள் இன்மையால் இவர்களால் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல கிராமப் புற பாடசாலைகளை நடத்த முடியாது என்பது தெளிவானது, அப்பாடசாலைகளுக்கு இணையவழி மூலம் பாடங்களை நடத்துவதற்கான வசதிகளும் இல்லை.

எனவே, இந்த அரசாங்கம் எடுத்துள்ள இந்தத் தீர்மானங்களால் என்ன பிரயோசனம் ஏற்படப் போகின்றது என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. நாட்டு நிலையைப் புரிந்து கொள்ள முடியாத கல்வி அமைச்சரும், அதிகாரிகளும் இருப்பது கவலையைத் தருகின்றது.”

“ஒரே நாடு ஒரே சட்டம் என்பது தான் கோட்டாபய அரசாங்கத்தின் தாரக மந்திரம். இந்நிலையில் நாட்டில் சில பாடசாலைகளை மூடவும், சில பாடசாலைகளை நடத்தவும் எந்த வகையில் தீர்மானம் எடுக்க முடியும்.

இதுவா ஒரே நாடு ஒரே சட்டம் எனக் கேட்க விரும்புகின்றேன்.

இதனைத் தவிர கிழக்கு மாகாணத்தின் சகல பாடசாலைகளும் வழமை போன்று நடைபெறும் என்ற அறிவித்தலை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சும், கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களமும் எடுத்துள்ளன என்ற செய்தியும் ஊடகங்களில் காணப்படுகின்றன.

பாடசாலை நடத்துவது தொடர்பில் குழப்பமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன: இம்ரான் மகரூப் குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணத்தின் அதிபர் ஆசிரியர்களுக்கு எரிபொருள் பிரச்சினை இல்லை என்ற அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரச வாகனங்களில் பயணம் செய்வோருக்கு எரிபொருள் பிரச்சினை இல்லை. இதனால் அவர்களால் அதிபர், ஆசிரியர்களின் கஸ்ட நிலையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது.

கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளின் அமைவிடம் எது? அவற்றுக்கான பொதுப் போக்குவரத்து உள்ளதா? இணையவழியில் கற்பதற்கான வசதிகள் கிராமப்புற மாணவர்களுக்கு உள்ளதா?

இணைய வசதிகள் இருக்கின்றன, எனினும் இன்றைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் அவர்களால் போதுமான இணைய வசதிகளை பெற்றுக் கொள்ள முடியுமா? என்பன போன்ற விடயங்களைக் கவனத்திற்கு எடுத்திருந்தால் கிழக்கு மாகாணம் இதுபோன்ற நடைமுறைச்சாத்தியமற்ற தீர்மானத்தை எடுத்திருக்காது.

நகர்ப்புற பாடசாலைகளை மூட வேண்டும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பை இந்த மாகாணம் ஏற்றுக் கொள்ளாதுப் புறந்தள்ளியுள்ளது என்பதையே இது காட்டுகின்றது.

ஆளுக்கொரு தீர்மானமும், இடத்துக்கொரு தீர்மானமும் எடுத்து கல்வியில் குழப்பத்தை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. எனவே, நாட்டின் யதார்த்த நிலையை கல்வி அமைச்சரும், அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

எரிபொருள் பிரச்சினையைக் காரணம் காட்டி கடந்த வெள்ளிக்கிழமை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே போல இந்த வாரமும் சகல பாடசாலைகளையும் மூடும் தீர்மானத்தை அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.