சுமந்திரன் படுகொலை சதித் திட்டம்! சந்தேக நபர்கள் மீது போதைப் பொருள் குற்றச்சாட்டு!

248 0

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5 பேரும் திட்டம் தீட்டினார்கள் என பொலிஸார் நீதிமன்றில் கூறவில்லை. அவர்கள் மீது போதை பொருட்களை வைத்திருந்ததாகவே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் இந்த விடயத்தில் எந்தளவு உண்மையுள்ளது என எண்ணத்தோன்றுகின்றது என கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்,

வடமாகாணத்தில் படையினரை தொடர்ந்தும் நிலை கொள்ள செய்வதற்கான முயற்சியா எனவும் எமக்கு சந்தேகம் உள்ளது என கூறியுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முன்னாள் போராளிகள் சிலர் சதி திட்டம் தீட்டியதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் போராளிகள் 5 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்தார்கள் என்றே பொலிஸார் நீதிமன்றில் கூறியிருக்கின்றனர்.

மாறாக நாடாளுமன்ற உறுப்பினரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினார்கள் என பொலிஸார் நீதிமன்றில் கூறியிருக்கவில்லை.

எனவே இந்த விடயத்தில் எந்தளவுக்கு உண்மையுள்ளது, என்ன நோக்கத்தில் இவ்வாறான பேச்சுக்கள் அவிழ்க் கப்படுகின்றது என ஆராயவேண்டியிருக்கின்றது.

மேலும் வடமாகாணத்தில் படையிரை தொடர்ந்தும் நிலைகொள்ள செய்வதற்கான ஒரு முயற்சியா என்ற சந்தேகமும் எமக்கு வலுவாக உள்ளது என முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.