எரிபொருளிற்காக காத்திருக்கும் மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொள்வது மோசமான விளைவுகளை உருவாக்கும்

141 0

எரிபொருளிற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொள்வது குறித்து  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

பெட்ரோல் டீசலிற்காக  நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பல கிலோமீற்றர் நீளும் வரிசைகளில் காத்திருக்கின்றனர் சில சந்தர்ப்பங்களில் நாட்கணக்கில் காத்திருக்கின்றனர் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு உட்பட ஏனைய அத்தியாவசிய பொருட்களிற்கு மக்கள் பெரும் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்ற – தீர்வொன்று கண்ணிற்கு தென்படாத நிலையிலேயே  எரிபொருளிற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுமக்கள் பலர் தங்கள் வருமானத்தினை இழந்துள்ளனர் தங்கள்குடும்பத்தினருக்கு உணவு வழங்குவதற்கான வழியில்லாத நிலையில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வரிசைகளில் நிற்கும்போதும் மருந்துகள் இன்மையாலும் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த மோசமான நிலைமை மக்களை விரக்தி நிலைக்கு தள்ளியுள்ளது அதன் காரணமாக சீற்றமும் விரக்தியும் காணப்படுகின்றது,கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் மத்தியில் அதிருப்திதோன்றிய பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குருநாகல் மஸ்பொத்த பகுதியில் கைத்துப்பாக்கியுடன் பொலிஸ் உத்தியோகத்தர் நபர் மீது எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் தாக்குதலை மேற்கொள்ளும் காட்சிகளும் அதனை தொடர்ந்து இடம்பெற்ற வாக்குவாதங்களும் அத்துருகிரியவில் இடம்பெற்ற வன்முறைகளும் நாட்டில் இடம்பெறும் வன்முறைகளிற்கான சிறிய உதாரணம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸாரினதும் இராணுவத்தினரினதும் குடும்பத்தவர்களும் இதேநிலைமையை எதிர்கொள்வதால் அவர்கள் மிகவும்சவாலான சூழலில் பணியாற்றுகின்றனர் இருந்தபோதிலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் பொதுமக்களை கையாள்வதில் மிகுந்த பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுவது மிகவும் முக்கியம் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொலிஸார் தங்கள் கடமைகளை செய்யும்போது புரிந்துணர்வுடனும் மிகுந்த பச்சாதாபத்துடனும் செயற்படுவதும் பொதுமக்களின் துன்பத்தை ஏற்றுக்கொள்வதும் அவசியம், சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் அனைத்து சம்பவங்களின் போதும் நியாயமாகவும் பாரபட்சமின்றியும் செயற்படவேண்டும்,பாரபட்சமானது நியாயமற்றது என தோற்றமளிக்கும் எந்தவொரு செயலும் ஏற்கனவே காணப்படும் அவநம்பிக்கையை அதிகரிக்கும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் மீதும் அனைத்து சட்டஅமுலாக்கல் அதிகாரிகளின் மீதும் பொதுமக்களிற்கு ஏற்படும் அவநம்பிக்கை நாட்டிற்கு மோசமான சீர்செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.