சுகாதார துறைக்கு வெளிநாட்டிலிருந்து 15 மில்லியன் டொலர் உதவி : உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து 1.5 மில்லியன் டொலர் ; வைத்தியர் ஷாபியிடமிருந்தும் மருந்து பொருட்கள்

103 0

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியினிடையே, சுகாதார மற்றும் மருத்துவ துறைக்கு என வெளிநாட்டில் வசிப்போரிடமிருந்து  இதுவரை 15 மில்லியன் அமரிக்க டொலர்கள் உதவி கிடைக்கப் பெற்றுள்ளது.

சுகாதார அமைச்சின்  மருத்துவ தொழில் நுட்ப சேவைகள் பிரிவின் பணிப்பாளரும் மருத்துவ உதவிகள் தொடர்பிலான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி  இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த வாரம் சுகாதார பொது கணக்குக்கு உலக சுகாதார ஸ்தாபனம் 1.5 மில்லியன் அமரிக்க டொலர்களை  வைப்புச் செய்துள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில், இலங்கையில் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்ய, ஓமான், கட்டார், டுபாய் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் தேரர்கள் உள்ளிட்டவர்களும்  உதவித் தொகையினை வழங்கியவர்களில் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சிங்கள தாய்மருக்கு சட்ட விரோதமாக கருத் தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட வைத்தியர் ஷாபிக்கு, கட்டாய விடுமுறை காலத்தில் வழங்கப்படவேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில், தனக்கு கிடைக்கப் பெற்ற சம்பளம், கொடுப்பனவு நிலுவையில் அத்தியவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்து சுகாதார அமைச்சிடம் கையளிக்க வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலருக்கு வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் அறிவித்துள்ளார்

;இந் நிலையில் இது குறித்து சுகாதார அமைச்சின்  மருத்துவ தொழில் நுட்ப சேவைகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானியுடன் ; கலந்துரையாடியுள்ள வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தனக்கு கிடைக்கப் பெற்ற நிலுவை சம்பளம், கொடுப்பனவில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்து தானமாக வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக இந்திய மருந்து நிறுவனம் ஒன்றுடன் பேசப்பட்டுள்ளதுடன், மிக விரைவில் அந்த மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பின்னர், அவற்றை சுகாதார அமைச்சிடம்  கையளிக்க வைத்தியர் ஷாபி சிஹாப்தீன்  நடவடிக்கை எடுத்துள்ளார்.