சிவயோகம்மா ஜெயசிங் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு.

61 0

09.06.2022

சிவயோகம்மா ஜெயசிங் அவர்களுக்கு
“நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு.

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசியச்செயற்பாட்டாளர்; சிவயோகம்மா ஜெயசிங் அவர்கள், 01.06.2022 அன்று உடல்நலக் குறைவு காரணமாகச் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது.

1990ஆம் ஆண்டிலிருந்து, தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாக் கிளையின் செயற்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்ட சிவயோகம்மா, தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் உறுப்பினராக விடுதலை வேட்கையுடன் செயற்பட்டவராவார். அத்துடன் புலம்பெயர்தேசத்தில் விடுதலைப் போராட்டத்திற்குத் தேவையான மிகப்பெரும் பங்களிப்புக்களிலும்; தன்னை இணைத்துக்கொண்டு தேசவிடுதலைப் பணியை முன்னெடுத்ததுடன், பிரித்தானியாவில் இயங்கிவந்த வெண்புறா நிறுவனத்திற்கும் தன்னாலான உதவிகளை வழங்கியிருந்தார்.

உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் தாயகச் சிறார்களின் கல்விவளர்ச்சிக்காகத் தன்னாலான பங்களிப்பைத் தனது முதுமைக்காலத்திலும் எமது தாயகமக்களுக்காக வழங்கியவராவார்.

சிரித்த முகத்துடன் நகைச்சுவையாக எல்லோருடனும் பழகக்கூடிய சிவயோகம்மா “நிலமிழந்து போனால் பலமிழந்து போகும், பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும். ஆதலால் மானிடனே தாய் நிலத்தை காதலிக்கக் கற்றுக்கொள்” என்ற வரிகளின் கருப்பொருளை உளமார ஏற்ற தாயாக இறுதிவரை வாழ்ந்தவராவார்.

இத்தகைய விடுதலைப்பற்றுறுதியுடன் இறுதிவரை செயற்பட்ட செயற்பாட்டாளரைத் தமிழ்மக்கள் இழந்து நிற்கின்றனர். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் சிவயோகம்மா ஜெயசிங் அவர்களது தேசப்பற்றுக்காகவும் தமிழினத்திற்கு ஆற்றிய பணிக்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.