சீனாவின் பட்டுப்பாதை திட்டம் – சிறிலங்காவில் வலுக்கும் மனக்கசப்பும் எதிர்ப்பும்!

292 0

கேந்திர முக்கியத்துவம் மிக்க அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை மேலும் விருத்தி செய்தல் மற்றும் இதற்கருகில் பாரியதொரு கைத்தொழில் வலயம் ஒன்றை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில் கடந்த ஆண்டின் இறுதியில் சீனா கைச்சாத்திட்டது.

ஆசியாவிற்கு ஊடாக சீனா தனது பட்டுப் பாதைத் திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்கான ஒரு பகுதியாகவே இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.

இந்த உடன்படிக்கையானது 20 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கைத் தீவினால் வரவேற்கப்படுகிறது. நாட்டின் கடன்சுமையைக் குறைப்பதற்கு இந்த நாட்டு மக்கள் முயற்சிக்கும் இந்த வேளையில், சீனாவானது தனது ஒரு அணை ஒரு பாதை என்கின்ற தனது திட்டத்திற்குள் சிறிலங்காவையும் உள்ளடக்கியுள்ளதானது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்ப்பதாகவே கொழும்பிலுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை அமைப்பதற்கு சீனாவால் இதுவரை 2 பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்காவில் தனது பிரசன்னத்தை தக்கவைத்துக் கொள்வதிலும் தனது பட்டுப்பாதைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் சீனா தற்போது எதிர்வுகூற முடியாத பல்வேறு புதிய சவால்களைச் சந்தித்து வருகிறது.

தென்னிலங்கையில் தொழிற்பேட்டை வலயம் திறந்து வைப்பதை எதிர்த்து கடந்த மாதம்   பல நூறு வரையான சிறிலங்கா மக்கள் காவற்துறையுடன் மோதலில் ஈடுபட்டனர். தமது நிலங்களை விட்டு வெளியேறமாட்டோம் என்பதில் இந்த மக்கள் உறுதியாக இருந்தபோதே இவ்வாறான கைகலப்புச் சம்பவம் இடம்பெற்றது. சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் சீனாவின் முதலீட்டை எதிர்த்து வன்முறைச் சம்பவம் இடம்பெற்றமை இதுவே முதற்தடவையாகும்.

சீனாவிடம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வழங்கும் சிறிலங்காவின் தீர்மானத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவே தலைமை தாங்குகிறார். சிறிலங்காவில் 2005-2015 வரையான காலப்பகுதியில் சீனா தனது முதலீடுகளை அதிகளவில் மேற்கொள்வதற்கு அனுமதியளித்தவரும் மகிந்த ராஜபக்ச என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

கடந்த மாதம் இடம்பெற்ற மோதலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் காவற்துறையினர் மீது கற்களை வீசிய அதேவேளையில் காவற்துறையினர் இந்த வன்முறையைத் தடுப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை மற்றும் தண்ணீர்ப் பீரங்கித் தாக்குதல்களையும் மேற்கொண்டனர். அதாவது சீனாவானது அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அருகில் கைத்தொழில் வலயம் ஒன்றை அமைத்தால் தாம் தமது சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு விடுவோமோ என இந்த மக்கள் அச்சம் கொள்கின்றனர்.

இருநாடுகளுக்கும் நன்மையளிக்கக் கூடிய நடவடிக்கைகளிலேயே சீனா ஈடுபடுவதாக சீன வெளியுறவு அமைச்சுத் தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் முதலீடு செய்வது தொடர்பாகக் கருத்துரைக்குமாறு கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்திடம் வினவியபோது இது தொடர்பில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.

சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் சீனாவின் ஒரு அணைத் திட்டத்தை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட முதலாவது சமிக்கையல்ல. லாவோஸ் மற்றும் தாய்லாந்தின் ஊடாக சீனாவிலிருந்து தொடருந்துப் பாதைகளை அமைப்பதற்கான சீனாவிடம் திட்டத்திற்கும் எதிர்ப்புக் காண்பிக்கப்பட்டது. சீனாவின் கடுமையான நிபந்தனைகள் மற்றும் சாதகமற்ற நிதி வழங்கல் போன்றனவே இத்திட்டத்தை எதிர்த்தமைக்கான காரணமாகும்.

hambantota-clash-3

ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வரையப்பட்ட அம்பாந்தோட்டை கொள்கலன் தாங்கித் திட்டமானது சீனாவின் துறைமுகப் பொறியியல் நிறுவனத்தாலும் சீன அரசிற்குச் சொந்தமான Merchants Port Holdings  நிறுவனத்தாலும் 40 ஆண்டுகளுக்கு செயற்படுத்தப்படும் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறிலங்காவின் துறைமுக அதிகாரசபையானது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் ஏனைய கொள்கலன் தாங்கிகளையும் 6000 ஏக்கர் கைத்தொழில் வலயத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்றே ஆரம்பத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 சதவீதத்தை சீனாவின் Merchants Port Holdings நிறுவனத்திற்கு 1.12 பில்லியன் டொலர் பணத்தில் 99 ஆண்டுகாலக் குத்தகைக்கு வழங்குவதெனவும் தற்போதைய சிறிசேன அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அதீத கடன் சுமையே சிறிசேன இவ்வாறானதொரு தீர்மானத்தை எட்டவேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு உட்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 1.5 பில்லியன் டொலர் நிதியை சிறிலங்காவிற்குக் கடனாக வழங்குவதாக கடந்த ஆண்டு அனைத்துலக நாணய நிதியம் உடன்பட்டது.

‘சீனாவிற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதென்பது சீனா எமது துறைமுகம் மீதான இறையாண்மை உரிமையை அனுபவிப்பதற்கு வழிகோலுகிறது. சீனாவுடனோ அல்லது ஏனைய வெளிநாட்டு முதலீட்டாளர்களுடனோ இது தொடர்பில் முரண்படவில்லை. ஆனால் சிறிலங்காவிற்கு மிகச் சிறந்ததைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான பிரச்சனையே இதுவாகும்’ என ராஜபக்ச தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள 15,000 ஏக்கர் நிலத்தில் கைத்தொழில் வலயத்தை அமைப்பதற்கு சீனாவின் Merchants Port Holdings   நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாகவும் சிறிலங்கா  அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுவே உள்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்குக் காரணமாகும்.

”எமது நிறுவனங்கள் சந்தைப்படுத்தல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இருதரப்புக்களின் சுயாதீன உறுதிப்பாடு, சமத்துவம் மற்றும் பரஸ்பர மதிப்பு போன்றவற்றை மதித்து சிறிலங்காவுடன் பேச்சுக்களையும் ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறது’ என சீன வெளியுறவுத்துறை பெண் பேச்சாளர் குவா சுன்சிங்க் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் மத்தல ராஜபக்ச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சீனாவால் 1.7 பில்லியன் டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இவ்விரு திட்டங்களும் எதிர்பார்த்தளவு பயனை வழங்கவில்லை.   இவ்விரு திட்டங்களும் நிறைவு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் அம்பாந்தோட்டைத் துறைமுகப் பராமரிப்பிற்கு கிட்டத்தட்ட 230 மில்லியன் டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

‘எல்லாம் சரியாக நடந்தால்’ அடுத்த மூன்று தொடக்கம் ஐந்து ஆண்டுகளுக்கு சீனாவால் சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் திட்டத்திற்கு 5 பில்லியன் வரை முதலீடு செய்யப்படும் எனவும் இதன்மூலம் 100,000 வரையான தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் தொழிற்பேட்டை வலயத்தை அமைப்பதற்காக காடுகள் துப்புரவு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமிக்காது தடுப்பதற்காக கடந்த வாரம் அதற்கருகில் காவற்துறை வீரர் ஒருவர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தார்.

‘நாங்கள் இத்திட்டத்தை முற்றிலும் எதிர்க்கிறோம். எமது நிலத்தை சீனர்களுக்கு வழங்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேறமாட்டோம்’ என அம்பாந்தோட்டையில் கைத்தொழில் வலயத்தை அமைப்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் அளவிடப்பட்ட பகுதியில் காணியைக் கொண்டுள்ள விவசாயியான உபுல் தம்மிக்க தெரிவித்தார்.

சீனாவிற்கு 15000 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டியதன் தேவை தொடர்பாக ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார். இந்த நாட்டிலுள்ள ஏனைய பொருளாதார வலயங்களின் மூன்று மடங்கு அதிகமான ஏக்கர் பரப்பளவில் தற்போது இந்த கைத்தொழில் வலயம் உருவாக்கப்பட வேண்டியதன் தேவை என்ன என ராஜபக்ச வினவியுள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த நாட்டின் மீது குற்றம் சுமத்தப்பட்ட வேளையில் மேற்குலகானது சிறிலங்காவைப் புறக்கணித்திருந்தது. இதன்போது சீனாவுடன் ராஜபக்ச பல்வேறு திட்டங்கள் தொடர்பாக உடன்படிக்கை மேற்கொண்டார். இதில் அம்பாந்தோட்டை மற்றும் அதற்கு அருகிலுள்ள விமானநிலையம் போன்றனவும் உள்ளடங்குகின்றன. சிறிசேன சிறிலங்காவின் அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட போது 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகரத் திட்டம் உட்பட சீனாவின் பல்வேறு திட்டங்களை இடைமறித்திருந்தார்.

இது சீனாவிற்கு குழப்பத்தை உண்டுபண்ணியது. இந்நிலையில் சீனா சிறிலங்கா மீது தனது கடனைத் திருப்பிச் செலுத்துமாறு அழுத்தம் கொடுத்தது. ‘சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 சதவீதத்தை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்குவது எனத் தீர்மானிக்கும் வரை சிறிலங்கா மீது சீனா உண்மையில் கோபம் கொண்டிருந்தது’ என பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் சமரசம் எட்டப்பட்டதா என கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்திடம் வினவியபோது இதற்கான பதில் வழங்கப்படவில்லை. தனது திட்டங்களை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இடைநிறுத்திய போது அதற்கான நட்டஈட்டை வழங்குமாறு சீன அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியதாகவும் அனைத்துலக வர்த்தக அமைச்சில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகமானது சிறிலங்காவின் பாரியதொரு கடன் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக சிறிலங்கா துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். சிறிலங்காவின் தேசிய கடனானது தற்போது 64 பில்லியன் டொலராகக் காணப்படுகிறது. இதில் சீனாவின் கடன்நிலுவை 8 பில்லியன் டொலராகும்.

தற்போது அம்பாந்தோட்டை ஒரு உறங்குநிலையில் உள்ளது. அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் விமான நிலையம் போன்றன உருவாக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் நாளொன்றுக்கு ஒரு விமானப் பறப்பு அல்லது ஐந்து தொடக்கம் ஆறு வரையான கப்பல்கள் தரித்து நிற்பது மட்டுமே இடம்பெறுகிறது.

இதேபோன்ற அம்பாந்தோட்டைப் பட்டிணத்திற்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை மற்றும் புதிய மாநாட்டு மண்டபம் போன்றன பயனற்றுக் காணப்படுகின்றன. அத்துடன் இங்கு சீனர்களால் உருவாக்கப்பட்ட துடுப்பாட்ட அரங்கானது திருமண வரவேற்புக்களுக்காகவே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

வழிமூலம்       – Reuters
ஆங்கிலத்தில்  – Shihar Aneez
மொழியாக்கம் – நித்தியபாரதி