இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம்

308 0

நல்லிணக்கம் மற்றும் சமயங்களுக்கு இடையிலான சகவாழ்வின் ஊடாக நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூக அபிவிருத்தியை அடைய முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமை மற்றும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.

ஆனால், அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக குறுகிய நோக்கத்தைக் கொண்ட சில சந்தர்ப்பவாத சக்திகள் செயற்படுகின்றன.

நாட்டுக்கு எதிராக செயற்படும் சக்திகளாகவே அவற்றைத் தாம் பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைந்து செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் என சுதந்திர தின உரையில் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை மற்றும் சாகச நிகழ்வுகள் என்பன இதன்போது இடம்பெற்றன.

சுதந்திர கொண்டாட்டத்தின் இறுதியில் இரண்டாவது முறையாகவும் இந்த வருடம் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியை தாங்கிய புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.