ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு

279 0

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு பேசினார். அவர் உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

உக்ரைன் நாட்டில் கிரிமியா தீபகற்ப பகுதி, பொது வாக்கெடுப்பு நடத்தி ரஷியாவுடன் இணைந்து விட்டது.இதே போன்று உக்ரைனின் கிழக்கு பகுதியில் வசிக்கிற ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், தனி நாடு கோரிக்கையை எழுப்பி கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ரஷியா ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது.

அங்குள்ள டோன்ட்ஸ்க் நகரம், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த நிலையில் அங்கு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் படைகளுக்கும் இடையே மீண்டும் கடும் மோதல்கள் நடந்து வருகின்றன. இரு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஐ.நா. சபையின் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளிப்பெண் நிக்கி ஹாலி பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் கிழக்கு உக்ரைனில் நடந்து வருகிற மோதல்கள் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம் கூட்டிய கூட்டத்தில் முதன்முதலாக பங்கேற்று பேசினார்.அவரது கன்னிப்பேச்சு முழுக்க முழுக்க ரஷியாவுக்கு எதிரானதாக அமைந்தது.

அப்போது அவர் கூறியதாவது:-முதன்முதலாக இந்த சபையில் நான் தோன்றிப்பேசுகிறபோது, உக்ரைனில் ரஷியா நடத்தி வருகிற தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கிற நிலை ஏற்பட்டது, துரதிர்ஷ்டவசமானது என்று கருதுகிறேன்.

ரஷியாவுடன் நாங்கள் நல்லுறவைக் கடைப்பிடிக்கத்தான் விரும்புகிறோம். ஆனால் கிழக்கு உக்ரைனில் நிலவுகிற மோசமான நிலைமை, ரஷியாவின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வைக்கிறது.அங்கு திடீரென சண்டை வலுத்திருப்பதால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கி தவிக்கின்றனர். முக்கியமான கட்டமைப்புகள் உருக்குலைந்து போய் விட்டன. நெருக்கடி பரவி வருகிறது. பல்லாயிரக்கணக்கானோர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

கிரிமியா, உக்ரைனின் ஒரு அங்கம்தான். எனவே அதை ஆக்கிரமித்துள்ள ரஷியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து கண்டனம் தெரிவிக்கத்தான் செய்யும். கிரிமிய ஆக்கிரமிப்பை ரஷியா உடனடியாக கைவிட வேண்டும். ரஷியா தனது கட்டுப்பாட்டை கைவிட்டு திரும்புகிற வரையில், கிரிமிய விவகாரத்தில் ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.