நாட்டை கட்டியெழுப்ப அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் உண்மையானவர்களாக செயற்பட வேண்டும்

328 0

வளமான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஊழல், மோசடிகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக உண்மையானவர்களாக செயற்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி தனதுரையில் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி தனது உரையில் தொடர்ந்து கூறியதாவது,

உலகம் பூராகவும் சுமார் 6000 மொழிகள் பேசப்படுகின்றன. அனைத்து மொழிகளிலும் சுதந்திரம் என்ற சொல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. அன்று சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களும் சுதந்திரத்திற்காக போராடினார்கள். உயிர் தியாகம் செய்தார்கள். அன்றைய சுதந்திரத்திற்கும் இன்றைய சுதந்திரத்திற்கு குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருப்பதாக கூறினார்.

இன்றைய சுதந்திரம் தொடர்பில் நோக்கும் போது, மனித சுதந்திரம், ஊடக சுதந்திரம், பேச்சு சுதந்திரம், சிந்திக்கும் சுதந்திரம், அமைதியான ஒன்றுகூடும் சுதந்திரம் போன்றன தொடர்பில் பேசப்படுவதாகவும், சமூக அபிவிருத்தியை நோக்காக கொண்டு செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

நாட்டின் தேசிய ஒற்றுமைக்காக அரசாங்கம் என்ற வகையில் எமது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வரவேற்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எமது இந்த வேலைத்திட்டங்களுக்கு எதிராக நாட்டிற்குள் செயற்படுபவர்களை நாட்டுக்கு எதிராக செயற்படுபவர்களாகவே நான் பார்க்கின்றேன்.

இந்த யுகத்தில் பிரதானமாக பொருளாதார சுதந்திரத்திற்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். 21ம் நூற்றாண்டில் எமது தாய்நாட்டில் சமூக உறுதிப்படு, பொருளாதார உறுதிப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும். பொருளாதார சுதந்திரத்தை ஏற்படுத்தி நாட்டை கட்டியெழுப்புவதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உண்மையானவர்களாக செயற்ட வேண்டும்.

அனைத்து நடவடிக்கைகளின் போதும் எமது கடமைகளை உண்மையாக நிறைவேற்ற வேண்டும். ஊழல் மோசடி இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும். இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள், படித்தவர்கள், இராஜதந்திரிகள், சமூகம் அனைவரினதும் பொறுப்பு இதில் முக்கியமானது.

இதற்காக வியர்வை சிந்தி பங்களிப்பு வழங்கும் விவசாய சமூகம் மற்றும் அனைவரதும் அர்ப்பணிப்பு முக்கியமானது. எமது நாட்டின் பொருளாதார சுதந்திரத்திற்காக நாம் அனைவரும் செயற்பட வேண்டும்.

இன்று அரசு சமாதானம், சகவாழ்வு, நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது. எமது நாட்டில் இருக்கின்றவர்கள் படித்த மக்கள். அதனால் நாடு என்ற வகையில் எமக்கு முன்னேறும் திறமை எம்மிடம் உள்ளது என்று ஜனாதிபதி கூறினார்.