அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி

377 0

மதுரை அவனியாபுரத்தில் நாளை(5-ந் தேதி), ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க 900-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மதுரை அவனியா புரத்தில் நாளை(5-ந் தேதி), ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.  அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 900-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பாலமேட்டில் 9-ந்தேதியும், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 10-ந் தேதியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து 3 இடங்களிலும் காளைகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அவனியாபுரத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள குருநாதன் கோவில் முன்பு உள்ள திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அங்கு முகூர்த்தக்கால் நடப்பட்டு வாடிவாசல், கேலரி, தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் பல கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. தகுதியான காளைகள் மட்டும் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படும் என்றும், இதற்காக அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் காளைகளுக்கு பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கால் நடைத்துறை இணை இயக்குநர் பாலசந்தர், துணை இயக்குநர் நாகரத்தினம் மற்றும் கால்நடை மருத்துவர் முத்துராம் தலைமையில் 23 மருத்துவ குழுவினர் கடந்த 4 நாட்களாக மருத்துவ பரிசோதனை செய்தனர். போட்டிகளில் பங்கேற்க தகுதியாக உள்ள காளைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை காளைகள் உரிமையாளர்கள், விழா நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு நடத்தும் அதிகாரியிடம் காண்பித்து பதிவு செய்தனர். மதுரை, கருப்பாயூரணி, ஊமச்சிக்குளம், திருமங்கலம், விருதுநகர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 900-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாடுபிடி வீரர்களின் பெயர்கள் பதிவு இன்று நடைபெற்றது. அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் வாடிவாசல், காளைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொழுவம் போன்றவற்றை அவர் நேரில் பார்வையிட்டார். ஜல்லிக்கட்டை காண 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரள வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. பார்வையாளர் கூட்டத்திற்குள் காளைகள் புகாமல் தடுக்க 8 அடி உயரத்தில் இரட்டை தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்பட்டுள்ளதையும், பார்வையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அமருவதற்காக அமைக்கப்பட்டுள்ள தனித்தனி காலரிகள் போன்றவற்றையும் கலெக்டர் வீரராகவராவ் ஆய்வு செய்தனர்.

வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகளை குறைந்தபட்சம் 15 மீட்டர் தூரத்துக்குள், மாடுபிடி வீரர்கள் பிடிக்க வேண்டும். காளைகளின் திமிலை தழுவியபடியே அடக்க வேண்டும். வால், கொம்பு, காதை பிடிக்கக்கூடாது. மீறி பிடித்தால், அந்த வீரர்கள் போட்டியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என வீரர்களுக்கு விதிமுறை குறித்து அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை அரசின் வருவாய்த்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நாளை காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது. முதலில் கோவில் காளையும், அடுத்து நாட்டாண்மை காளையும் அவிழ்த்துவிடப்படுகிறது. அதன்பின் கிராமத்து காளை அவிழ்த்துவிடப்படும். பின்னர் ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்படும்.

ஜல்லிக்கட்டு காளைகளை மடக்கிப்பிடிக்கும் வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்குடம், சைக்கிள், கட்டில், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்றவை பரிசாக வழங்கப்படும்.