கடலில் எண்ணெய் படலத்தை அகற்றுவதில் ஒருங்கிணைப்பு இல்லை என்று கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனை தி.மு.க. மகளிரணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி இன்று பார்வையிட்டார். எண்ணூர் பாரதியார் நகரில் நடந்து வரும் பணியை பார்வையிட்ட பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
கடலில் எண்ணெணை படலம் கலந்தது குறித்து பொது மக்களுக்கு சரியான தகவல் தரவில்லை. விபத்து நடந்து 2 நாட்களுக்கு துறைமுகத்திற்கு கப்பல் கொண்டு சென்றுள்ளனர். எண்ணை படலம் இன்னும் முழுமையாக அகற்றப்பட வில்லை. விபத்துக்குள்ளான கப்பலை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.
2 நாட்களில் எண்ணெணையை அகற்றி விடுவோம் என்று கூறினார்கள். வளர்ந்த நாடுகளில் கூட இதுபோன்ற சம்பவம் நடக்கும்போது 2 நாட்களில் அகற்றுவது கடினம். இதனால் இங்குள்ள எண்ணெய் படலத்தை அகற்றுவதற்கு 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகலாம். இதன் காரணமாக மீன் வளம் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும்.
எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் அரசு துறை அதிகாரிகளுக்கும் கடற்படை அதிகாரிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. அதனால் தான் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது.இந்த பணியில் தினமும் 1000 பேர் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசம் கொடுக்கப்படவில்லை.
மேலும் இந்த பணியில் விஞ்ஞானிகளோ, அனுபவம் மிக்க தொழில் நுட்ப வல்லுனர்களோ ஈடுபடுத்தப்படவில்லை. சாதாரண வாளிகள் மூலம் எண்ணெய் படலத்தை எடுத்து வருகிறார்கள். இதுகுறித்து நான் பாராளுமன்றத்தில் பேசினேன். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் குரல் கொடுத்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

