கோட்டாவுக்கு பதிலாக பசிலை கொண்டுவர சூழ்ச்சி

134 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை நீக்கிவிட்டு பசில் ராஜபக்‌ஷவை அதிகாரத்திற்கு கொண்டுவரும் சூழ்ச்சியை ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணியினர் முன்னெடுத்து வருவதாகவும், பாராளுமன்ற பெரும்பான்மையை வைத்து இதனை செய்ய முடியும் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ
தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு பதிலாக பசிலை கொண்டுவருவது தீர்வல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

21 ஆம் திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்கள் அதிகளவில் பாராளுமன்றத்திற்கு ஒப்படைக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 17,19 ஆம் திருத்தங்கள் மூலமாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்து அவற்றை நீக்கிக்கொண்டனர்.

ஆகவே 21 ஆம் திருத்தத்தின் மூலமாக மீண்டும் நாட்டின்  சுயாதீனத்தை உறுதிப்படுத்தி நாட்டு மக்களின் பிரதான கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தவும், 21 ஆம் திருத்தத்தின் பின்னர் மக்களுடன் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உடனடியாக ஜனாதிபதியின் பதவியை பறிக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர், ஆனால் அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை மற்றும் நீதிமன்ற தீரவிப்பு என்பன  அவசியம். ஒருவேளை ஜனாதிபதி பதவி விலகினால் அடுத்ததாக பாராளுமன்றத்தில் சாதாரண  வாக்கெடுப்பு நடத்தி இன்னொரு நபரை  தெரிவு செய்ய வேண்டும்.

பொதுஜன முன்னணியே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ளது. அடுத்ததாக அவர்கள் தெரிவு செய்யும் நபர் கோட்டாபய ராஜபக்‌ஷவை விடவும் மோசமான நபராக இருந்தால் என்ன செய்வது? அந்த நபர் பசில்  ராஜபக்‌ஷவாக இருந்தால் என்ன செய்வது? கோட்டாவுக்கு பதிலாக பசிலை  கொண்டுவருவதா இதற்கு தீர்வு? எனவே 21 ஆம் திருத்தத்தில் இருந்தே இந்த நகர்வுகளை ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் சர்வாதிக்கான போக்கை கொண்ட நபர் ஒருவரை தெரிவு செய்யாது தவிர்க்க முடியும் என்றார்.