இன, சமய பேதங்களைத் தாண்டிய மனித நேயமிக்க அமைதியான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை உருவாக்க சவால்களை வெற்றிகொள்ள தயாராகுவோம்- பிரதமர் ரணில்

385 0

சவால்களை வெற்றிகொள்ள துணிச்சலுடனும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட இந்த சுதந்திர தினத்தில் விசேடமாக உறுதி பூணுவோம்  என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

மிகவும் மோசமான ஓர் ஆட்சிக் காலத்தைத் தோற்கடித்து நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியான நிலைமையில், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டு தான் சுதந்திரத்தின் 69 ஆவது வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகின்றமை தனிச்சிறப்பு மிக்க சந்தர்ப்பம் என நான் நினைக்கிறேன் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

நாடு என்ற வகையில் நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்வது நம் அனைவரினதும் பொறுப்பு என்பதுடன், தற்போதைய அரசாங்கம் நாட்டினதும், மக்களினதும் பொருளாதார, சமூக, ஆன்மீக சுதந்திரம் தொடர்பாக மிகுந்த பொறுப்புடன் செயற்படுகின்றது என்பதை இச்சந்தர்ப்பத்தில் விசேடமாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.

கடந்த இரண்டு வருட காலப்பகுதியினுள் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல், நட்புறவான சர்வதேசத் தொடர்புகளை மேம்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வெற்றி கொள்ளுதல், இன, சமய பேதங்களைத் தாண்டிய மனித நேயமிக்க அமைதியான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை உருவாக்கல், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதற்கான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பல வெற்றிகளை எம்மால் பெற்றுக் கொள்ள முடிந்தது எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்