10 பிரதான அரசியல் கட்சிகளின் புதிய கூட்டணி உதயம் – விமல் வீரவன்ச

254 0

அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணியாக ஒன்றிணைந்து எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

சுயாதீன 10 கட்சிகளின் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இரவு கொழும்பில் உள்ள கம்யூனிச கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆரசியல அரசியல் சவால்களை வெற்றிக்கொள்வதற்காக 10 பிரதான கட்சிகளை ஒன்றினைத்து  முற்போக்கான கூட்டணி ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளோம்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளோம்.

முழு நாடும் பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது. தற்போதைய இக்கட்டான பின்னணியில் அரசாங்கம் என்றதொன்று இருப்பது அவசியமானதாகும்.

நாட்டு மக்கள் பயன்பெறும் வகையிலான தீர்மானங்களை அரசாங்கம் முன்னெடுக்குமாயின் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயார்.

நிபந்தனையற்ற ஆதரவு வழங்குகிறோம் என்ற காரணத்திற்காக அரசாங்கம் தன்னிச்சையான முறையில் முறையற்ற வகையில் செயற்பட முடியாது.அரசாங்கத்தின் செயற்பாடுகளை நாட்டு மக்கள் உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள்.

அரசியல் நெருக்கடியினையும்,பொருளாதார நெருக்கடியினையும் தீவிரப்படுத்திய முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தற்போதும் திரைமறையில் இருந்துக்கொண்டு செயற்படுகிறார்.

பொதுஜன பெரமுனவின் ஒருசில உறுப்பினர்களை தன்வசம் வைத்துக்கொண்டு தனக்கு சாதகமான விடயங்களை செயற்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் முக்கிய பல விடயங்கள் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் உள்வாங்கப்பட வேண்டும். இரட்டை குடியுரிமையுடைய நபர் அரச செயலொழுங்கில் எவ்விதத்திலும் தலையிடாத வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.