கரோனா தீவிரத்தை அதிகப்படுத்துகிறது காற்று மாசுபாடு: புதிய ஆய்வு முடிவு

140 0

ரோனா தொற்றின் தீவிரத்தை காற்று மாசுபாடு அதிகப்படுத்துகிறது என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஆய்வு ஒன்றை கனடிய மருத்துவ சங்க இதழ் (Canadian Medical Association Journal) வெளியிட்டுள்ளது. 1,51,105 பேர் பங்கெடுத்த இந்த ஆய்வின் முடிவில், ‘நுண்ணிய துகள் பொருள், நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவை காற்றை பொதுவாக மாசுப்படுத்தும் காரணிகளாக உள்ளன. எங்களது ஆய்வில் காற்று மாசுள்ள இடங்களில் வசிப்பவர்கள் கரோனாவினால் பாதிக்கப்படும்போது காற்று மாசின் காரணமாக கரோனாவின் தொற்றுக்கு தீவிரமாக உள்ளாகின்றனர். இதனால் சில நேரங்களில் தீவிர சிகிச்சை பிரிவுகளிலும் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் உயிர் போகும் ஆபத்தும் உள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு பொது சுகாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பாக ஸ்பெயின், மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளும் சேர்க்கப்படவுள்ளது. மேலும், இது தொடர்பாக நிறைய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கனடா விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகரித்து வரும் காற்று மாசு: உலகெங்கிலும் வாழக்கூடிய மக்களில் 91% பேர் காற்று மாசுக்கு ஆளாகின்றனர். இதில் 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒவ்வோர் ஆண்டும் இறக்கின்றனர். காற்று மாசுதான் மிகப்பெரிய சுகாதார ஆபத்தாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கூறி வருகிறது.

இந்தியாவில் நிகழும் 10.5% மரணம் காற்று மாசு காரணமாக நிகழ்கிறது. காற்று மாசு அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் குழந்தைகள் கருவிலிருந்தே மாசுபட்ட காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதன் காரணமாகவே குழந்தைகள் உயிரிழப்பு, பிறக்கும்போது குழந்தைகள் எடை குறைவாக இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக உலகம் முழுவதும் இயங்கும் சுகாதார அமைப்புகள் சுட்டிக்காட்டி வருகின்றன.