மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது – முதல் நாளில் பத்மராஜன் உட்பட 3 பேர் மனு

119 0

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் பத்மராஜன் உட்பட 3 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் 6 பேர் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. தமிழகத்தில் திமுகவின் டிகேஎஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அதிமுகவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. இதனால், காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களையும் நிரப்புவதற்கான தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வரும் 31-ம் தேதி வரை காலை 11 முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுக்களை அளிக்கலாம். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ம் தேதி நடக்கிறது. மனுக்களை திரும்பப் பெற ஜூன் 3 இறுதி நாளாகும். போட்டி இருப்பின் ஜூன் 10-ம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணிவரை சட்டப்பேரவை குழுக்கள் அறையில் வாக்குப்பதிவு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அனைத்து விதமான தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து வரும் சேலம் மேட்டூரைச் சேர்ந்த கே.பத்மராஜன், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலிலும் போட்டியிட, தேர்தல் நடத்தும் அலுவலரான கி.சீனிவாசனிடம் மனு அளித்தார். இது அவரது 230-வது வேட்பு மனுவாகும்.

தருமபுரி மாவட்டம் நாகமரையைச் சேர்ந்த அக்னி ஸ்ரீராமச்சந்திரன், விருதுநகர் மாவட்டம் அயன்கொல்லாங்கொண்டான் நக்கனேரியை சேர்ந்த 67 வயதான மா.மன்மதன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலின்போது, வேட்பாளர்கள் தேவையான ஆவணங்களுடன் 10 சட்டப்பேரவை உறுப்பினர்களின் முன்மொழிதல் கடிதத்தையும் அளிக்கவேண்டும். அவ்வாறு அளிக்காதபட்சத்தில், பரிசீலனையின்போது வேட்புமனு நிராகரிக்கப்படும்.