இலங்கையில் இடம்பெறுவதை ஒத்த போராட்டங்கள் உலகநாடுகளிலும் வெடிக்கும் – சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எச்சரிக்கை

302 0

அரசாங்கமொன்று சீராக இயங்காத பட்சத்தில் இலங்கையில் இடம்பெற்றுவருவதைப்போன்ற போராட்டங்கள் ஏனைய உலக நாடுகளிலும் எழுச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா எச்சரித்துள்ளார்.

அரசாங்கங்கள் நாட்டிலுள்ள மிகவும் வறிய சமூகத்திற்கு ஏற்றவகையில் உணவுப்பொருட்கள் மற்றும் வலுசக்தியின் விலைகளைப் பேணவேண்டியது மிகவும் அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிகரித்துவரும் வாழ்க்கைச்செலவின் காரணமாக உலகளாவிய ரீதியில் பலரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதனை முன்னிறுத்தி வழங்கப்படும் உதவிகள் மிகவும் பின்தங்கிய தரப்பினரை இலக்காகக்கொண்டவையாகவும், அவர்களை நேரடியாகச் சென்றடையக்கூடியவையாகவும் அமையவேண்டியது அவசியம் என்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி அரசாங்கம் உரியவாறு செயற்படாதவிடத்து இலங்கையில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் ஏனைய நாடுகளிலும் முன்னெடுக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.

தற்போது இலங்கையில் நிலவுவதைப்போன்ற அமைதியின்மை நிலை கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு முன்னரான காலகட்டத்தில் பிரான்ஸ் மற்றும் சிலி ஆகிய நாடுகளில் நிலவியதாகச் சுட்டிக்காட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, மக்களின் ஆதரவின்றி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களும், வெகுவாக அதிகரித்துவந்த சமத்துவமின்மையுமே அதற்கான பிரதான காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் பல்வேறு வழிமுறைகளிலும் மக்களுடன் தொடர்புபடக்கூடியவாறான கொள்கைத்தீர்மானங்களை மேற்கொள்வது அவசியம் என்றும் கொள்கைகள் வெறுமனே தாள்களில் எழுதப்பட்டவையல்ல, மாறாக அவை மக்களை முன்னிறுத்தியவையாக அமையவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.